Saturday, 16 November 2013

கீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்

கீழக்கரை S.N.தெருவைச் சேர்ந்த எஸ். ஏ. ஸஹீருதீன் அவர்கள் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். சமூக பணிகளில் ஆர்வமுடைய இவர் சமூகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார்

கீழக்கரை !!! ஆண்டுகள் பல கடந்து நிற்கும் பள்ளிவாசல்கள், இம்மாவட்டதிற்கே கல்வி ஒளி தரும் பல்துறை சார்ந்த கல்லூரிகள்; இதில் மகளிருக்கென ஒரு தனி கல்லூரி, சரித்திரம் போற்றும் கொடை வள்ளல்கள், அரிவிற்சிறந்த கல்வியாளர்கள், பெரும் தொழில் அதிபர்கள் என ஆயிரம் ஆண்டு கால பெருமையை தாங்கி நிற்கும் ஒரு ஊர். இவ்வூரைச் சேர்ந்த நான் எனது மேற்படிப்பிற்காக வெளிவூரில் தங்கி இருந்த பொழுது உடன் படிக்கும் சக நண்பர்களின்  வீட்டிற்கு செல்வதுண்டு, அப்பொழுது என்னை அறிமுகப்படுதிக் கொள்ள விளையும் நான், எங்கே நமது ஊர் பெயரைச் சொன்னால் சட்டென பிடிபடாதோ என்று, நான் இராமேஸ்வரம் அருகில் இருக்கும் ஒரு ஊரைச் சார்ந்தவன் என கூறுவதுண்டு.

சற்று விளக்கதுடன் கீழக்கரை என்று கூறினால்.  ‘’ஓ ! கீழக்கரையா ? பெரிய 'பெரிய பாய் மாருகள்' இருக்கும் ஊராச்சே!!’’ என்று அங்கு உள்ள வயதில் பெரியவர்கள் பரிச்சயத்துடன் கேட்பார்கள் !! ஆனால் எனது நண்பர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ கீழக்கரையை தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நான்  வெளி ஊர்களில் சந்தித்த பெரியவர்கள் கீழக்கரையை நன்றே அறிந்து வைத்து இருந்தது எனக்கு சற்று வியப்பையே தந்தது. மிக சமீபத்தில் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் தற்போது பணி செய்யும் நான் இம்முறை நோன்பு பெருநாளைக்காக கீழக்கரைக்கு வந்த பொழுது... நான் பிறந்து, வளர்ந்து, பார்த்து, பழகிய கீழக்கரையை மேற்கூறிய அனுபவங்கள் சற்று மாறுபட்ட கோணத்துடன் பார்க்க தூண்டியது.

கீழக்கரைக்கு வந்திறங்கிய அந்த காலை பொழுதினில் சற்றே சலசலத்த  சத்தத்தால் விழித்த எனக்கு வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருந்தது என் காதில் கணீரெனே ஒலித்தது. ’மோட்டார்ல தண்ணி ஏரல, கிணத்துல தண்ணி இல்லயாம், அர ஒர தான் தண்ணி கெடக்குதாம் !!  மழையும்  இலல, அப்படியே மழை பேன்ஞ்சாளும் தண்ணி மன்னுக்குள்ளயா போகுது ? சிமிண்டு ரோடு போட்டு ஒரு தண்ணியும் மண்ணுக்குள்ள போக மாடிக்குது !!! அந்த காலத்துலைலாம் இப்புடியா இருந்துசி ? தெருவெல்லாம் மண்ணுக்காட கெடக்கும், வெருங்கால்ல நடக்கவே பிருசமா இருக்கும் !!! ஹ்ம்ம்….’’ என்ற ஒரு பெரு மூச்சு.

நோன்புப் பெருநாள், காலத்தின் வேகத்தில் சட்டென ஒட... கீழக்கரை மஜீதா மைந்த்தன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இடம் பெற்ற  ‘’காணாத காட்சி’’  சிறு கதையை படித்த எனக்கு அக்கதையில் வரும் வர்ணனைகள் ஒரு கணம், கீழக்கரையின் சற்றே பழமையான வாழ்க்கை முறையினையும், பழம் பெருமையயும் அழகாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.அதனால்..

அன்று இரவு பெரிதும் யோசித்த நான். மறுநாள் காலையில், இத்தனை நாள் ஏதேதோ ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க ஆசை பட்டவன்... இன்று கீழக்கரையை சுற்றிப் பார்க்க வேண்டும் என தோன்றியது. மறுநாள் காலை விடிய.. பட்டென கால்கள் வெளியில் நகர்ந்தது. அறிந்த தெரிந்த இடங்கள் என கால் போன போக்கில் எல்லாம் போன எனக்கு கண்ணில் பட்டவைகள் அனைத்தயும் மனது படம் எடுத்து வைத்து கொண்டது.

பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றதாக தோன்றுகின்ற கீழக்கரை உண்மையிலேயே பலன் தரக்கூடிய ஒரு வளர்ச்சியை பெற்றுள்ளதா?? இல்லை.. ஒரு சரியான தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த ஒரு வளர்ச்சியை நோக்கி செல்கின்றதா..? என்ற கேள்வி சற்றே எனக்குள் மேலோங்கியது. அவ்வாறு தொலைநோக்கில் சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஒரு சரியான திட்டம் சார்ந்த வளர்ச்சி சில துறைகளில் தேவை என தோன்றியது.

முதலில்  நகரின் சுத்தம் மற்றும் சுகாதரம்  சார்ந்த துறையில் முன்னேற்றம் தேவையென எனக்குத் தோன்றியது. தெருக்களிள் பார்த்த இடமெல்லாம் குப்பைகள், ஈக்கள் மொய்க்கும் கழிவுகள் என சுத்தம் என்பது நாடு கடத்தப்பட்டே இருந்தது. இதற்கு நான் வழக்கம் போல் குறை கூற விரும்பவில்லை. இதற்கு நமது ஊர் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் மிக முக்கியமான ஒரு காரணமாக அமைகிறது என்பது மறுக்க முடியாத ஒரு உன்மை.

வெல்ஃபேர் மற்றும் நகராட்சியில் இருந்து வந்து தெருக்களை சுத்தம் செய்வார்கள், நமக்கென்ன..? என்ற சுத்தம் பற்றிய கவலையின்மை நம் மக்களிடையே மிக அதிகம். அவரவர் வீட்டு வாசலை அவரவர் சுத்தமாக வைதிருக்க எண்ணம் கொண்டு சிறு முயற்சி எடுத்தாலே போதும். தெருக்கள் சுத்தம் பெறும். இந்த முயற்சி ஒன்றே தீங்கு விளைவிக்கும் பல நோய்களை விட்டும் தூரமாக வாழ்வதற்கு வழிவகை செய்யும்.

வளர்ச்சி பெறவேண்டிய அடுத்த துறை  கல்வி.  இத்துறையில் நமதூர் மக்கள் பெரிதும் வளர்ச்சி கண்டதாக தோன்றினாலும் அதன் பலன் என்பது சற்று குறைவாகவே இருக்கின்றது. ஜார்ஜ் என்ற ஒரு மேல் நாட்டு அறிஞர்  ‘’கல்வி என்பது சிறந்த மனிதனை உருவாக்கவே அன்றி ஒரு அற்ப வேலையை  தரும் வழி அன்று’’  என்று கூறினார். இத்தகைய ஒரு பலன் தரக்கூடிய கல்வி மிகக்குறைவு.

இந்த சமூகத்தில் இருந்து சிறந்த ஒரு கல்வியின் மூலம் உயர்பதவிகளிள் இருந்து இந்த பகுதிக்கு பல நண்மைகளை செய்யும் வகையில்  IAS, IPS, CA  போன்ற சிறப்பு மிக்க கல்விக்காக நமது மக்களை தயார் செய்ய வேண்டும். ஆறிவு கூர்மை நிறைந்த பல மாணவ மற்றும் மாணவிகள் நமது ஊரில் மிக அதிகம். இவர்களை அடயாளம் கண்டு சரியாக வழி நடத்தினால் அதன் விளைவு பெரும் பயன் தரும். அடுத்ததாக வளர்ச்சி வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று,  அரசியல் மாற்றத்தின் மூலமாக அடையக் கூடிய ஒருங்கினைந்த சமூக முன்னேற்றம் ஏற்பட ஏதுவாக அமையும்.

கீழக்கரையின் இத்தனை ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல சிறப்பு மிக்க தலைவர்களை பார்த்து இருக்கிறோம். இனி வரக்கூடிய காலங்களில் படித்த துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, பெரியவர்கள் வழி நடத்த, வழிமையும் புதுமையும் மிகுந்த ஒரு வழுவான அரசியல் மாற்றத்திற்காக முயற்சிகள் வேண்டும். ஊரின் பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு ஊரில் புதிதாக பெரும் செலவில் கட்டிய கடற்கரை பாலம். மிக குறுகிய காலத்திலேயே பராமரிப்பற்று சேதம் அடைய தொடங்கி விட்டது.

இரவு நேரங்களில் போதிய விளக்குகள் இன்றி மிகவும் ஆபத்தான ஒரு இடமாகவும் சமூக விரோதிகளுக்கு ஒரு உறைவிடமாகவும் மாறி இருக்கின்றது. புதிய பாலம் போன்ற கட்டமைப்புகளை சரிவர மேம்படுத்தி அழகு சேர்க்காவிட்டாலும், அது பழுதடைந்து பயனற்று போகும் நிலை எற்படாமல் பராமரிப்பு செய்வது நமது கடமை ஆகும்.

இது போல் இன்னும் ஆயிரம் உண்டு !!

இது அனைத்துக்கும் பாடுபடும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கென  ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

அந்த குழுவானது மற்ற அமைப்பு மற்றும் மதம் சாரா படித்த இளைஞர்கள், வெளிநாடுகளில் பணியில் இருக்கும் சகோதரர்களை கொண்டு ஒரு வலிமையும் துடிப்பும் மிக்க கலப்பற்ற ஒரு குழுவாக உருவாக்க வேண்டும்.

பெருமைவாய்ந்த கீழக்கரை முன்னேற்றத்தின் மூலமாக இனி வரக்கூடிய தலைமுறைகளும் இவ்வுலகில் அறியட்டும்.

ஆயிரம் மைல் தொலைவு கொண்ட பயணமாக இருந்தாலும் அதன் தொடக்கம் முதல் அடியிலேயே !!

சிறு துளி பெரு வெள்ளம் !! இந்த முயற்சி சமூக முன்னேற்றத்திற்கு வித்திடடும் !!

விளைவோம் ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை நோக்கி.. இன்ஷா அல்லாஹ் !! 


ஆக்கம் :  ஸஹீருதீன் எஸ். ஏ.

FACE BOOK COMMENTS :
 • Sadham Er    good post...
 • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல சிந்தனை கட்டுரை. கீழக்கரை என்றால் ஆஹோ ஓஹோ என்று கூப்பாடு போடும் நம் மண்ணின் மக்கள், இன்னும் இங்கு நடந்தேற வேண்டிய நல்ல மாற்றங்கள் குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது போன்று சமூக அக்கறையுடன் எழுதும் கீழக்கரை இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது உளம் மகிழ்கிறது.
 • Keelai Ilayyavan நம் இளைஞர்கள் இன்னும் இது போன்று பல தலைப்புகளில் சமூக நலன் தாங்கிய கட்டுரைகளை எழுத முன் வர வேண்டும். அவ்வாறு எழுதப்படும் கட்டுரைகள், கவிதைகள், சிந்தனை சிதறல்கள் எதுவாகினும் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தரும் படி கேட்டுக் கொள்கிறேன். salihhussain.ks@gmail.com
 • Riffan Zyed Nice and real words. Thanks 4 writing this Mr.saheerdeen
 • Saheerudeen Klk Thank u all brothers for ur front driving words jazakallahul haira
 • Rajakhan Mohamed இளம் எழுத்தாளனும், சமூக சிந்தனையாளனுமாகிய, தம்பி சஹீருதீனுக்கு என் வாழ்த்துகள்...ஆயிரம் போர்வாற்கள் சாதிக்காததை ஒரு பேனா முனை சாதிக்குமென்பார்கள்...அப்படித்தான் இருக்கிறது உன் கட்டுரையும். மென்மேலும் இது போன்று சீரிய கருத்துக்களை பகிர வாழ்த்தி, இது போன்ற இளைஞர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் நண்பன் யாசீன், மற்றும் தம்பி கீழை இளையவன் ஆகியோரையும் மனதாரப்பாராட்டுகிறேன்...
 • Saheerudeen Klk Assalamu Alaikkum vrah..
  Anbu Sagodharargale ! Ungaludaya Valthukkalukkum & Aravanaippirkkum Mikka Nandri ! Irudhiyil Ikkatturayin Moolam Nan Iraivanidam venduvadhu, ippadaippu oru padhivaaga mattume ninruvidakkudadhu enbadhu dhan ! Kaalam kalamaga "V
  aaimaiye Vellum" ena marappalagayil eludhi thonga vidappattulladhe thavira manidhanin valkaiyilo alla awanin seyalpaatilo kaanamudiyavillai.. Eluththu Eluththaagave Irukkindradhu.. Indhappadhivum Verum Oru Eluthaagave Nindru Vidavendaam... Vilaivom Oru Sirandha Samooga Kattamaippai Nokki ! Insha Allah !

Friday, 25 October 2013

ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரையாளர். கீழக்கரை ஸஹிருதீன்

மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய் “மொழி” அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.  மொழியினை மிகச்சரியாக விளக்கிக் கூறினால் மொழியானது சப்தமிடும் வார்தைகள் மட்டுமல்ல ஓசையில்லா அசைவுகளும் கூடத்தான். ஒரு மொழியின் முக்கியக் குறிக்கோள் தகவல் பரிமாற்றம் தானே !!இதன் அடிப்படையில் ”மழை வரும் முன் தன் தோகையை விரித்தாடும் மயில் மனிதனுக்கு சப்தம் இல்லாமல் சொல்கிறது.. 'மழை' வரப்போகிறது என்று; மண்ணில் புதைந்த சிறுவிதையில் இருந்து தன் மெல்லிய சக்தி கொண்டு பூமியை முட்டிக் கொண்டு வெளிவரும் முதல் இலை, நான் உங்களுக்கு பயன் தர வந்துவிட்டேன் என கூறுகின்றது; இது தான் தன் உலகமோ ?? என சந்தேகத்தில் இருந்த கோழிக்குஞ்சு முட்டைத் தோடுகளை உடைத்துக் கொண்டுவந்து “இன்று எனக்கு பிறந்தநாள்” என நம்மிடம் மொழி பேசுகின்றது”.

உலகில் இன்று வரை 6500கும் மேற்பட்ட  மொழிகள் பேசப்படுகின்றன, இதில் பழக்கதில் இருந்து பேசப்படாமல் போன மொழிகளும் பல. ஆனால் இன்றைய நாகரீக உலகம் ஒரே ஒரு மொழியை மட்டும் தன் தலையில் தூக்கி வைததுக் கொண்டு ஆடுகின்றது ! அதேதான், அந்த மொழியே தான் !! ENGLISH!! ஏன் இந்த மொழிக்கு மட்டும் இவ்வளவு மவுசு ?? மனிதனின் வழ்க்கையில் அங்கு இங்கு என எங்கு பார்த்தாளும் இந்த மொழியின் ஆக்கிரமிப்பாய் தானே உள்ளது ?? இந்த கேள்விக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் ஒரு மிக முக்கியமான காரணம் உண்டு, அந்த காரணத்தை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே அறிவீர்கள்

இம் மொழி இல்லை என்றால் உலகமே அசையாது என்ற சூழலும் வந்து விட்ட்து ஆனால் நமது பெற்றோர்களிடமோ அல்லது நமது வாப்புச்சா மற்றும் அப்பாமார்களிடம் கேட்டுப்பாருஙள், அவர்கள் பள்ளி பயிலும் காலத்தில் அவர்கள் அனைவருக்கும் பெரிய பூச்சாண்டியாய் இருந்தது அவர்களது ஆங்கில வாத்தியார் தான்.

“இங்லீஸ் வாத்தியர் வகுப்புடா அடுத்து !! மாப்புல, மதுல ஏரிக்குதிச்சி ஓடுடா !!!

என்ற அவர்கள் காலம் போய் ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. கிரிக்கெட் கமெண்டரியில் பேசுவது போல தஸ்ஸ்..  புஸ்ஸ்..  என பேச பலருக்கும் ஆசை. இந்த ஆசைக்கு வயது வரம்பு கிடையது !! உண்மை என்ன வெனில் இம்மொழியை கற்றுக் கொள்வது மிக எளிமை. தற்போது இம்மொழியை எளிதில் கற்றுக் கொள்வது எவ்வாறு என பார்ப்போம். இது ஒருவரின் மொழித்திறனை பொருத்தே அமைகின்றது, ஆதலால் நாம் அடிப்படையில் இருந்து கற்றுக்க கொள்ள விரும்பும் ஒருவரது பார்வையில் இருந்து செல்வோம்.

இந்த கற்றுக்கொள்ளும் முயற்சியை நாம் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு மிகச்சரியக ஒப்பிடலாம், ஒரு கட்டுமானத்தை உருவாக்கு வாக்குவதற்கு மிக முக்கியமாகவும், அதிகமாகவும் தேவைப்படுவது “செங்கல்” மற்றும் “சிமெண்ட்” தானே ! அதே போல வார்த்தைகள் (VOCABULARY) செங்கல்லாகவும் இலக்கணம் (GRAMMER) சிமெண்ட்டினைப் போலவும் வார்த்தைகளை ஒன்றோடு ஒன்றை இனைத்து நமது தேவைக்கேற்ப வடிவமைத்து பேசுவதற்கு உதவுகின்றது. 

சராசரியாக 600 முதல் 1000 ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தால் ஒருவரால் அடிப்படையாக ஆங்கிலம் பேச முடியும். ஆயிரம், ஐநூறு என்ற உடன் மலைத்து விட வேண்டாம் !! இதற்கு நான் உஙகளுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு சுவாரசியமான உண்மயைச் சொல்கிறேன். சமீபத்தில் நான் செய்த ஒரு சிறு ஆய்வில், நாம் பேசும் 100 வார்தைகளில் 40-ல் இருந்து 60 வார்த்தைகள் ஆங்கில வார்தைகளாக அமைவதைக் கணடேன். சற்று கவனியுங்கள்.

\TV, FAN, RADIO, PHONE,  MOBILE, COMPUTER, LAPTOP, PENDRIVE, SHIRT, PANT, CURRENT, BIKE, CAR, PETROL, TABLE, SOFA, TOWEL, KERCHIEF, ELECTRICIAN, MOTOR, PIPE, SHOWER, SPEAKER, MOUSE, KEYBOARD,  WATCH, ENGINE, BREAK, CALL, SCHOOL, TUTION, LEAVE, PEN, PENCIL, NIGHT, SIR, MADAM, BUS, MESSAGE, SCAN, MAIL, TEA, COFFEE, JUICE,  ICECREAM,  EXAM, TEST, MATCH, TROUSER, PASTE, SOAP, SHAMPOO, UNCLE, AUNTY, ASSIGNMENT, AUTO, ROAD, SPEEDBREAKER, XEROX, PRINTOUT, PICNIC, TOUR, RATECUTTER, BOOSTER, INTERNET, FACEBOOK, POST, HOSPITAL, CLINIC, GYM, CHAIN, SHOE, COMPUTER, LAPTOP, TABLET, MODEM, REMOTE, BEDSHEET, WINDOW, MARRIAGE, CLASSROOM, PASS, FAIL, KEYCHAIN, ELECTRICIAN, PLUMBER, DADDY, MUMMY,  GIFT, TIE, SPRAY, FLIGHT, NIGHT, STOVE, PLATE, SPOON, TOWEL, PERFUME, PRAYER, FAST, LATE, OFFICE. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...

இது அனைத்தும் தமிழ் வார்த்தைகளா என்ன ?? நான் குறிப்பிட்டது மட்டுமே 100 வார்த்தைகள், இன்னும் நீண்டு கொண்டே போகும். இப்படி நாம் பேசும் இரண்டு வார்த்தைகளில் ஒன்று ஆங்கில வார்த்தையாக அமைகிறது. இதில் இன்னும் சுவாரசியம் என்ன வென்றால் நாம் தான் இப்படி பேசுகிறோம் என்று பார்த்தால் நமது கண்ணுமாமார்களும், வாப்புச்சாமார்களும் நாம் பேசுவதில் பாதியை பேசுகிறார்க்ள் என்பது தான் !! அதனால் நமக்கு 400 – 600 வார்த்தைகள் இயல்பாகவே தெரியும். இன்னும் 400 வார்த்தைகள் தானே எளிதில் கற்றுக்கொள்ளலாம், கவலை வேண்டாம் !

அடுத்ததாக நம்ம சிமெண்ட் அதுதான் நம்ம இலக்கணம் (GRAMMER). இதன் தரம் மிக முக்கியம். இதை வைத்தே தேவைக்கேற்ப நம்மால் வார்த்தைகளை இணைத்து சரிவர பேசமுடியும். ஆதலால் இதனை கற்றுக் கொள்வதில் சற்று கவனம் தேவை, ஆனால் இதை கற்றுக் கொள்வது மிகவும் சுலபம்.

கட்டிய கட்டுமானதின் மீது அடிக்கடி தண்ணீர் ஊற்றி அதனை வலுப்படுத்துவது போல் நாம் கற்றுக் கொண்ட வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூர்ந்து பேச்சு வழக்கில் பயண்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அது மனதில் உருதியாக நிற்கும், ஏனெனில் புதிதாய்க் கற்றுக் கொண்ட வார்த்தைகள் எளிதில் மறந்துபோக அதிக வாய்ப்புள்ளது

சாதாரணமாக வாழ்வதற்க்கு ஒரு மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அடிப்படையான வீடு போதும் அல்லவா ? அதுபோல அடிப்படையாக ஆங்கிலம் பேசுவதற்க்கு (BASIC COMMUNICABLE ENGLISH). நான் மேற்கூறிய முயற்சிகள் போதுமானது !! இதற்க்கு மேல் மாடிக்கு மேல் மாடிகட்டுவதும், அழகாக்குவதும் நமது எண்ணத்தயும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

இனி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கனும் அல்லவா ? இப்பொழுது தான் நமது நண்பர்கள், சொந்தக்காரர்கள் என அனைவரிடமும் ஆலோசனைக் கேட்போம். என்ன கலர் அடிப்பது, இதை எங்கேவைப்பது, அதை எங்கே வைப்பது என அனைத்து திசைகளில் இருந்தும் ஐடியாக்கல் குவியும். அதனால் இப்பொழுது டிப்ஸ் & ஐடியாஸ்.

டிப்ஸ் 1: 

தங்களின் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் தம்பி, தங்கை மற்றும் மருமக பிள்ளைகளின் ஆங்கில கதை புத்தகத்தை எடுத்து சற்று வாசியுங்கள். இதில் மிக எளிமையான ஆங்கில வார்த்தைகள் தான் பயன் படுத்தப்பட்டு இருக்கும். நம்மால் எளிதில் புரிந்து கொள்ளவும் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும் இது உதவும்.

டிப்ஸ் 2: 

கதைப்புத்தகங்கள் படிப்பது சுலபமாக புரிகிறதெனில் அடுத்ததாக செய்தித்தாள் (NEWSPAPER) படிக்கத் தொடங்குங்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் தெரியாத வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ள தொடங்கிவிட்டால், இது பெறும் பயன்தரும்.

டிப்ஸ் 3: 

இயன்ற வரை ஆங்கிலம் பேசும் சூழ்நிலைக்குள் இருக்கப் பழகுங்கள். இது நமது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள சிறப்பாக உதவும்.

டிப்ஸ் 4: 

தவறுகளை பற்றி அனுவளவும் கவலைவேண்டாம். தவறுகளே நம்மை சிறப்பாக பேசவைக்கும்.. நாம் தவறு செய்யும் போது நம்மை மற்றவர்கள் திருத்துவார்க்ள். இதனால் நாம் இன்னும் வலுபெறலாம். “வெற்றிக்கு முற்றுப்புள்ளி மட்டுமே வைக்கத் தெரியும் ஆனால் தோல்வியால் மட்டும் தான் காற்புள்ளி வைக்க முடியும்”

டிப்ஸ் 5: 

மற்றவர்கள் ஆங்கிலம் பேசுவதை கவனியுங்கள், அவர்கள் எவ்வாறு வார்ததைகளை பயன் படுத்துகிறார்கள் எனவும், அவர்களின் உச்சரிப்புகள் எவ்வாறு அமைகின்றன எனவும் கவனியுங்கள் (OBERVATIONAL LEARNING). உதாரணமக ஆங்கில நியூஸ் சேனல்கள், கிரிகெட் கமண்டர்ரி போன்ற ஆங்கில நிகழ்ச்சிகளை பார்த்து வாருங்கள். இதன் மூலமாக நாம் PHONETICS, USAGE OF WORDS, STYLE & WAY OF SPEAKING என பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

டிப்ஸ் 6:

PRE DEFINED FORMAT என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது பேசுவதற்க்கு குறிப்பிட்ட TEMPLATE-களை வைத்துப் பேசிப்பழகுவதாகும். இதற்கு சரியான ஒரு எடுத்துகாட்டு சூரத்துல் ஃபத்திஹா தான். எந்த ஒரு மனிதனும் சூரத்துல் ஃபத்திஹாவை உட்கார்ந்து மனப்பாடம் செய்ததில்லை. அடிக்கடி கேட்டு கேட்டு அதுவே நம் மனதில் பதிந்து விட்டது அல்லவா ? அதுபோல் ஒரு முறை பேசினால் இந்த இடத்தில் இப்படித் தான் பேசவேண்டும் என நமக்கே தெரிந்துவிடும்.

அடடே, ஒரு முக்கியமான விசயத்தயே மறந்து விட்டோமே. அது இல்லாமல் எப்படி வீட்டைக்கட்டுவது ?? அதுதான் அஸ்திவாரம்... 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையையும், மன உறுதிதியையும் அஸ்திவாரமாய் அமைத்து அதன் மீது உஙகள் வீட்டினை எழுப்புங்கள். வல்ல இறைவன் அதை உறுதியாக்குவான். இனி என்ன..! வீட்டைக்கட்ட தொடங்க வேண்டியது தானே ? மறக்காமல் வீடு குடியேருவதற்கு என்னையும் அழையுங்கள். இதன் மூலம் ஒருவர் கல்வியை அறிந்து கொண்டார் ! பேசுகிறார் என்ற அகமகிழ்சியுடன் நிச்சயமாக வருவேன்.

இறைவன் அருளால் எனது முதல் கட்டுரைக்கு எண்ணிப்பார்க்க இயலாத வாழ்த்துக்களை அல்லாஹ் மிகப்பெரியமனிதர்களிடம் இருந்து எல்லாம் எனக்கு கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ் !!! 

எனக்கு வாய்ப்பளித்த மற்றும் வாழ்த்திய அனைத்து நல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் படித்த இளைஞர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு இக்கட்டுரையை அந்த முயற்சிக்கு என்னுடய முதல் பங்களிப்பாக, கல்வி வளர்சிக்காக சமர்ப்பிக்கின்றேன். இக்கட்டுரை அனைத்து தரப்பு மக்களுக்கும், முக்கியமாக தமிழ் வழியாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என இறைவனை பிரார்திக்கிறேன். 

மேலும் ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு Saheerudeen Klk என்ற எனது முகபுத்தக முகவறிக்கோ அல்லது +91-7871513370 என்ற எனது எண்ணிற்கோ தொடர்புகொள்ளுங்க்ள். உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உங்களது சந்தேகங்களை கீழக்கரையின் நலம் விரும்பி பாடுபடும்  முகப்புத்தக பக்கங்களில் போஸ்ட் செய்யுங்கள், நமது சகோதரர்கள் நிச்சயமாக உதவுவார்கள். மறவாமல் இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள். முக்கியமாக மாணவர்களுக்கு இந்த வழிமுறையை சொல்லுங்கள்.

சித்திரமும் கைப்பழக்கம் !! ஆங்கிலமும் நா பழக்கம் !!
விளைவோம்.... ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை நோக்கி.... இன்ஷா அல்லஹ் !

Wednesday, 23 October 2013

கீழக்கரையில் காலாவதியான காகித கடிதத்திற்கான காத்திருப்புகள் - கட்டுரையாளர் கீழை இளையவன் !

கீழக்கரை நகரத்து ஆண் மக்களில் 80 சதவீதத்தினர் இன்றும் வருவாய் தேடி கடல் கடந்து சென்று வசிக்கின்றனர். மனைவி, மக்களை, சொந்தங்களை, நண்பர்களை எல்லாம் பிரிந்து சென்று பாலைவனங்களில் வாடும் அவர்களின் சோகக் கணைகள் சொல்லி மாளாது. அதுவும் 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொலை தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. திருமணமாகி இரண்டு மாதமே ஆகியிருக்கும் சூழலில், வருவாய் தேடி வளைகுடா பயணம் மேற்கொண்டு, மனைவியை இரண்டு மூன்று வருடங்கள் பிரிந்து வாழும், மிக சோகமான தருணங்கள் இருந்து வந்தது.


அப்போதெல்லாம் மனக் காயத்திற்கு அருமருந்தாக, பிரிவால் வாடும் இதயங்களை தேற்றும் நண்பனாக, உறுதுணையாய் நின்றது "கணவன் மனைவிக்கிடையே" நடை பெற்ற கடிதப் போக்குவரத்து தான். ஆனால் அந்த அற்புதமான கடிதப் போக்குவரத்து எல்லாம் தற்போது காலாவதியாகிவிட்டது. போஸ்ட் பாக்ஸ்கள் எல்லாம் குப்பை கூடைகளாகி விட்டது. ஒருகாலத்தில் மக்களால், மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வந்த போஸ்ட் மேன்கள், இன்று மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டனர். 

இந்த அதி நவீன உலகில், நாம் இன்றோ பேஸ் புக்கில் பேசிக் கொள்கிறோம், அமெரிக்காவில் இருந்து வாட்ஸ் அப்பில் நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறோம். மன நிலை சரியில்லாதவர்களை தவிர எல்லோரிடமும் செல் போன் இருப்பதாக ஸ்டேடஸ் போடுகிறார்கள். தனி செல் போன் நம்பர், பேஸ் புக் ஐ டி இல்லாதவர்கள் சமூகத்தில் கோளாறு உடையவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆப்பிள் லேப் டாப், ஐ.பாட்,  நானோ டெக்னாலஜி என தகவல் பரிமாற்றம் படு வேக வளர்ச்சி கண்டுள்ளது. கீழக்கரையில் தூறல் விழுந்தால் சான் பிரான்சிகோவில் சாரல் அடிக்கிறது.


இடம் : லெப்பை தெரு சந்திப்பு, கீழக்கரை 

கீழக்கரை நகரில் என்பதுகளில் (1980- 89) , டேப்ரிக்கார்டர் இருந்த வீடுகளில் எல்லாம் நாகூர் சலீம் இயற்றி, காயல்.ஷேக் முகம்மது பாடிய, "கப்பலுக்கு போன மச்சான்" என்கிற பாடல் வரிகள், ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்தப் பாடலில் கணவனைப் பிரிந்த மனைவியின் துயரத்தையும், மனைவியைப் பிரிந்த கணவனின் சொல்லொன்னா சோகத்தையும், தவிப்பையும், வளைகுடா வாழ்கை பற்றியும் தெளிவாக சொல்லியிருப்பார். 

இந்தப் பாடலை பிரிவின் விளிம்பில் இருக்கும் தலைவனோ, தலைவியோ.. தனிமையில் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வழிந்தோடும். இன்றும் அரபு நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இந்த பாடலை கேட்டு அழுகையை அடக்க முடியாமல் தேம்பி அழுபவர்கள் ஏராளம். கீழக்கரையில் தொலை காட்சி பெட்டியின் வரவுக்கு முன்னால், ஆடியோ கேஸட்டுகளும்,  டேப் ரிக்கார்டர்களும் மட்டுமே அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இந்த பாடலின் வரிகள் இதோ :

மனைவி:

கப்பலுக்கு போன மச்சான்,
கண் நிறைந்த ஆசை மச்சான் எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.
நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

கணவன்:

கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல நினைத்தது எல்லாம் தருவேன்.

மனைவி:

அக்கரைக்கு போனதுமே அக்கறையும் போயுடுச்சோ?
அன்று சொன்ன வார்தைகளின் அர்தங்களும் மாறிடுச்சோ?
சக்கரை மேல் கோபம் கொண்டு கட்டெரும்பும் ஓடிருச்சோ?
சங்கதி தெரியலையே! மன்னன் மனம் வாடிருச்சோ?

கணவன்:

அன்னமே அடிக் கரும்பே ஆவல் என்னை மீறுதடி
எண்ணை கிணறு போல எண்ணம் எல்லாம் ஊறுதடி.
உன்னை அங்கு விட்டு வந்து உள்மனசு வாடுதடி.
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கு வாழுதடி.

மனைவி:

துபாயுக்கு பயணம் போயி வருசம் ஆறாச்சு
துள்ளி வரும் காவிரி போல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நான் இங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்துடுங்க தக்க துணை நானாச்சு!!

கணவன்:

பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி!
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமே பாரிலே யாருக்கடி?

மனைவி:

துல்ஹஜ் மாதத்திலே கடிதம் ஒண்ணு போட்டிங்க
நலமா சுகமானு பாசம் வச்சு கேட்டிங்க!
இங்கே எனக்கு என்னை குறை!
இருக்கிறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்லை!!!

கணவன்:

ஈச்சமர தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாதத்திலே தீர்ந்து விடும் ஒபந்தமே!!
ஆக்க பொருத்தவளே ஆறப் பொறு ரத்தினமே!
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல
நினைத்தது எல்லாம் தருவேன்.

இந்த பாடலை கேட்க : 


தொலை தொடர்பு வசதிகள் குறைந்த அந்த காலக்கட்டத்தில், வசதி படைத்த சிலர் வீடுகளில் மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அதனால் இன்று நாம் நினைத்தவுடன், மனைவி, மக்களுடன் பேசி மகிழ்வது போல் உடனடியாக பேசி விட முடியாது. அவசர தகவல்களை சொல்ல வேண்டுமென்றாலும், தொலைபேசி வைத்திருந்தவர்களின் வீடுகளில் அரை நாளுக்கு மேல் காத்திருந்து தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் தான் நிலவியது. 

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கடிதம்  சென்றடைய இரண்டு வாரம் குறையாமல் ஆகி விடும். வீட்டிலிருந்து  வரும் கடிதத்தை எதிர்பார்த்து கண்ணீர் வடிக்கும் கணவனும், அதே போல் கணவனின் கடிதத்தை எதிர் பார்த்து போஸ்ட் மேன் அண்ணன் எப்போது வருவார் என ஏக்கத்துடன் காத்திருக்கும் மனைவியின் வாட்டமும் எழுத்தில் வடிக்க முடியாத வேதனைகள். வீட்டு வாசலில் 'அம்மா... போஸ்ட்' என்கிற  சப்தம் கேட்டு அடுப்பங்கரையில் சோறு வடிக்கும் பெண்மணி புன்னகையோடு ஓடி வந்து, 'கடிதம் துபாயிலிருந்து தானே  வந்திருக்கு.. அல்ஹம்துலில்லாஹ்' என நெஞ்சில் அணைத்தவாறு கொண்டு செல்வார்.


தற்போதைய கீழக்கரை போஸ்ட் மேன்கள் 

கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், துன்பங்கள் எல்லாம் கொஞ்ச நேரம் காணாமல் போக, இதயத்தில் மகிழ்ச்சி பொங்க ஒத்தடம் கொடுப்பதாக அமையும். கடிதத்தை பிரித்து தன் அன்புக் கணவரின் கைகளால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை முத்தமிடும் மனைவி, ஒரேழுத்து விடாமல் திரும்ப திரும்ப படித்து  மகிழ்ந்திடுவர். அது போல் அரபு நாட்டில் மனைவியின் கடிதம் கண்ட கணவனும் தலையைனை அடியில் வைத்து, மனைவியின் அன்பு வரிகளை  நித்தமும் வாசித்து சுவாசிப்பார். அந்த அற்புத காலங்களை தற்போது நவீனம் துண்டாடிவிட்டது எனபது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நவீன வரவுகளால் 
எழுதுகோலின் மகத்துவம் 
மெல்ல மறைந்து வருகிறது...
அளவற்ற  கதைப்புகளால் - அன்பும்
அதி வேகமாய் குறைந்து வருகிறது....

வாருங்கள் நண்பர்களே..  ஒரு கடிதம் எழுதுவோம்...! 
அன்பே... ஆருயிரே.. என்னவளே... என்று.  எழுதுகோல் தாங்கி..!

Saturday, 24 August 2013

'புதுக் கல்லூரி' ஒரு புதுக் கவிதை - நண்பர் 'தமீமுன் அன்சாரி' அவர்களுடன் கல்லூரி கால மலரும் நினைவுகள் !

புதுக் கல்லூரி குறித்து கல்லூரியின் முன்னாள் மாணவர், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர். நண்பர். எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தன் முக நூலில் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

4900 மாணவர்கள், 250 பேராசிரியர்கள், 150 ஊழியர்களுடன் அழகான கட்டிடங்களுடன் மாநகரின் மையப்பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது எங்கள் புதுக்கல்லூரி! சென்னை மாநகரின் 'டாப் 5 ' கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இதை தமிழ்நாட்டின் 'கேம்பிரிட்ஜ்' எனலாம்.


மெஸ் மேனேஜர் குட்டன் அவர்களுடன் நண்பர். தமீமுன் அன்சாரி

இங்கே படித்த பிரபலங்கள் ஏராளம். சிராஜுல் மில்லத் அப்துல் சமது, ஜி.கே. வாசன், டி.ஆர். பாலு, டாக்டர் கே.வி.ஏஸ். ஹபீப் முஹம்மத், பேரா.ஜவாஹிருல்லா, சரத்குமார், கார்த்திக், பி.வாசு, ராதாரவி, சாலவுதீன் (ஈடிஏ) என அரசியல், சமுகம், சினிமா, இலக்கியம், வணிகம் என பல்வேறு துறைகளை சார்ந்த வித்தகர்கள் உருவாகிய பாசறை.

பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஆண் அழகர்கள் என புதுக்கல்லூரி மாணவர்கள் குறித்து பிறக் கல்லூரி மாணவர்களிடம் ஒரு பொறாமை உண்டு. ஆனால் இங்கே சமானியர் வீட்டுப் பிள்ளைகள் சரிபாதி பேர் படிக்கிறார்கள் என்பதே உண்மை.

கடந்த 3 மாதங்களாக கல்லூரியின் துணை முதல்வர் அப்துல் கபூர் சார் அவர்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்புவிடுத்த வண்ணம் இருந்தார். நேற்று (23.08.2013) ஜூம்மா தொழுகைக்கு வருவதாக கூறி, அவ்வாறே சென்றேன்.

அங்கு ஜூம்மாவுக்கு செல்லும்போதேல்லாம் முன்னால் மாணவ நண்பர்களை சந்தித்து மகிழ முடியும். நினைத்தவாரே பல சந்திப்புகள் நிகழ்ந்தது.

தொழுகைக்கு பிறகு துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களோடு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடினோம். கல்லூரி தொடங்கி 60 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கான விழா குறித்தும், முன்னாள் மாணவர்கள் ஆகிய எங்களின் பங்களிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


60 ஆண்டுகளை நினைவுகூறும் பொருட்டு கட்டப்பட்டுவரும் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்திற்கு நான் முடிந்தளவு நிதி திரட்டித் தர வேண்டும் என கபூர் சார் வேண்டுகோள் விடுத்தார்.

கட்சிக்கு நிதி திரட்டுவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இதுவேறு புது சுமையா? என தயங்கினேன். நாம் படித்த கல்லூரிக்கு நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் என்று நினைத்து ஒப்புக்கொண்டேன்.

விழாவிற்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை அழைக்கும் திட்டம் உள்ளதாகவும், ஹஜ் பெருநாளை பிறகு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுவதாகவும் கூறினார்கள்.

பிறகு சிங்கப்பூர், மலேசியா, துபாய் (அமீரகம்) உள்ளிட்ட நாடுகளில் புதுக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தை தொடங்குவது குறித்தும் பேசினோம். முதல்கட்டமாக சிங்கப்பூர், மலேசியாவில் கட்டமைக்கும் பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்றும், அதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை விரைவில் தருவதாகவும் கபூர் சார் கூறினார். பிறகு எல்லோரும் இணைந்து துபாய்க்கு செல்வோம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இச்சந்திப்புக்கு பிறகு நாங்கள் வாழ்ந்து மகிழ்ந்து ஊஞ்சல் ஆடிய புதுக்கல்லூரி வடுதிக்கு சென்றேன். ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் அன்றும் இன்றும் கூடி வாழும் சோலை அது.

பழைய நினைவுகள் வாட்டின. அறை எண்கள்: 37,44,57,84 என நான் தங்கியிருந்த இடங்களை ஏக்கத்துடன் பார்த்தேன். நண்பர்களின் முகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. சன்னல் கண்ணாடியை அலகினால் கொத்தி உரசி வீட்டிற்குள் செல்லத் துடிக்கும் சிட்டு குருவியை போல என் கண்கள் அலைபாய்ந்தன.எத்தனை எத்தனையோ ஞாபகங்கள் குமுறி எழுந்தன.. சிரித்துப் பேசிய பொழுதுகள், சீனியர்- ஜீனியர்களுடன் உறவாடிய இடங்கள், ஒடி விளையாடிய இரவுகள், எழுச்சியுரையாற்றி சமூகநீதி போராட்டங்களுக்கு மாணவர்களை திரட்டிய பரபரப்பான நாட்கள், விவாதங்கள் நடத்திய அந்திப் பொழுதுகள், சின்னச் சின்ன சண்டைகள், கவிதைகளை எழுதிக் குவித்த புல்வெளி, கூடியமர்ந்து கும்மியடித்த கிணற்றடி நட்சத்திரங்களை ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி, உணவருந்தி மகிழ்ந்த 'மெஸ்' என நினைவுகள் கால் பந்துகளாய் மாறி நெஞ்சத்தை உதைத்து விளையாடின.

அங்குள்ள ஊழியர்கள் உற்சாகத்தோடு வரவேற்றார்கள் 46 ஆண்டு காலமாய் 'மெஸ்' மேனஜராக இருக்கும் குட்டனை சந்தித்தேன். அவர் ஒரு கேரளக்காரர். இவர் புதுக்கல்லூரி பின்பற்றிவரும் மதச்சார்பின்மையின் அடையாளம். அப்போது நேரம் மாலை 4.30 ஆகியிருந்தது. மாணவர்கள் தேனீர் அருந்த 'மெசுக்கு' வந்த வண்ணம் இருந்தனர். பலர் என்னை அடையாளம் கண்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

களவாடிய பொழுதுகளை, ஆடோகிராப் நினைவுகளோடு சுமந்துக்கொண்டு விடுதியை திரும்பிபார்த்துக்கொண்டே புறப்பட்டேன்.

மாலை நேரம் என்பதால் கல்லூரி வளாகம் பரபரப்பாக இருந்தது. நாமும் இப்படிதானே வசந்த கால பறவைகளாய் பாடித் திரிந்தோம்...அந்த நாட்கள் மீண்டும் வராதோ... என மனம் துடித்தது

மார்க்கம், சமுதாயம், அரசியல், இலக்கியம், ஆளுமை, துணிச்சல், என அனைத்தையும் கற்றுக்கொடுத்த 'அறிவுசோலை'யில் சில மணிநேரங்களை கழித்த திருப்தியோடு, நகர மனம் இன்றி நகர்புற பரபரப்புகளை நோக்கி நகர்ந்தேன்.


உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் நண்பர்களே.. நீங்கள் எல்லாம் நலம்தானா? உங்களுக்காக ஒரு நினைவேந்தல் கவிதையை தருகிறேன்..

புதுக் கல்லூரி...

நாங்கள் புத்துணர்ச்சி பெற்ற
கொடைக்கானல்!

டால்பின்களாய் நீந்தி மகிழ்ந்த
அறிவுக் கடல்!

ஒரு கூட்டுப் பறவைகளாய்
சிறகடித்த வேடந்தாங்கல்!

கவலைகளே இல்லாமல்
சுற்றித் திரிந்த சமவெளி!

அந்த திருவிழா நாட்கள்
ஒரு வாடகை வசந்தம்!

அந்தப் பூவாசம்
மீண்டும் மணக்காதோ...
பூங்காற்று திரும்பாதோ...


வசந்த கால நினைவுகளுடன்,
எம். தமிமுன் அன்சாரி

Monday, 1 October 2012

சாதிக்க ஆசைப்படும் மாணவ பருவத்தினருக்கான புத்தகம் - 'சாதிக்க ஆசைப்படு' !

தமிழகத்தின் வடக்கு மண்டல ஐ.ஜி ஆக பணியாற்றும் டாக்டர். செ. சைலேந்திர பாபு அவர்களால் எழுதப்பட்ட BOYS & GIRLS.. BE AMBITIOUS என்ற நூலினுடைய மொழியாக்க நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதனை முனைவர். அ. கோவிந்தராஜூ அவர்கள் வெகு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். சுரா பதிக்ககத்தினரால்  வெளியிடப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூ.150 ஆகும்.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும், படிக்கப் படிக்க, ஒரு புது உத்வேகத்தை இளைய தலை முறையினருக்கு வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இடையிடையே வரலாற்று செய்திகள் மூலமாக, தன்னம்பிக்கையூட்ட முனைதிருக்கும் பாங்கு உள்ளத்தில் ஊக்கத்தை மேலிடச் செய்கிறது.  இந்திய தேசத்தின் எதிர் கால தூண்களான மாணவ பருவத்தினர்களை பலப்படுத்த, வளப்படுத்த, செழுமை படுத்த, சீர்படுத்த, மிகக் கடுமையான வேலை பளுக்களுக்கும் இடையே டாக்டர். செ. சைலேந்திர பாபு அவர்கள் முயற்சித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.


இந்த நூல், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய  தன்னம்பிக்கை டானிக், ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு, புரிதலுடன் வாசிக்க வாங்கி கொடுக்க வேண்டிய பொக்கிஷம். 

புத்தகத்தின் உள்ளே புதைந்து கிடங்கும் நம்பிக்கை சாரல்களின் சிதறல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :

தன்னைத் தானே உயர்த்தும் படிநிலைகளில் முதன்மையானது கனவு காணுதல். இளைஞர்களைக் கனவு காணச் சொல்லும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுதலுக்குத் தரும் விளக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார்:
“உறங்கும் போது நீ காணும் கனவு கனவல்ல; உன்னை உறங்க விடாமல் செய்யும் வெற்றி அடையும் வெறி, உயர் அவா, அது தான் கனவு”.

உனக்கென ஒரு கனவு உள்ளதா?

அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.

“எனக்கு என ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய அடிமைகளின் உரிமையாளர் வெள்ளையரின் மகன் – இவ்விருவம் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்”.

தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட நம் மகாத்மா காந்திதான் இந்த மார்டின் லூதர் கிங்கின் முன்மாதிரி மனிதர். இவர் எளிய கறுப்பின குடும்பத்தில் 1929-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் பிறந்தார். போஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றஅவர், தனது 26-ம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராட்டக் களத்தில் இறங்கினார்.

1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த மார்டின் லூதர் கிங் சொன்னார், “நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன். ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்”.

காந்தியடிகள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானதைப் போல், லூதர் அவர்களும் தன் 45-ம் வயதில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.அவர் கண்ட கனவு 2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் நனவாகியது. ஆம் அன்று தான் ஒரு கறுப்பின இளைஞரான பராக் ஒபாமா அமெரிக்க நாட்டின் 44 வது குடியரசுத் தலைவரானார்.

மார்டின் லூதர் கிங்கின் கனவு நனவானதுபோல், உன்னுடைய கனவும் ஒரு நாள் நனவாகும். ஆனால் இளைஞனே உன்னிடத்தில் ஒரு கனவு உள்ளதா?

 உன் கனவை செதுக்குவதற்கு முன் நீ சிந்திக்க வேண்டும்.

- உன் திறமைகளின் இருப்பை ஆய்வு செய்.
- உன் விருப்பு வெறுப்புகளை ஆய்வு செய்.
- உன் மனோ பாவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்.

ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து நீ உன்னிடம் சில கேள்விகளைக் கேள்.

- நான் யார்?
- நான் எதை விரும்புகிறேன்?
- என்னுடைய பலம் எது?
- என்னுடைய பலவீனம் எது?
- விரும்பும் பணிக்கேற்றஉடல்வளம் எனக்கு உண்டா?
- என் உடலில் உள்ள குறைகள் எவை?
- என் நினைவாற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
- என்னுடைய விருப்பு என்ன? வெறுப்பு என்ன?
- இதுவரை சாதித்தது என்ன?
- இதுவரை தோற்றது எவற்றில்? எவ்வளவு?

எது எனக்கு மன மகிழ்ச்சியைத் தரும்? பணமா? புகழா? அதிகாரமா? வெற்றியா? உன்னை எடைபோடுவதில்; நீ மிகவும் கறாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். உன்னுடைய விருப்பு, வெறுப்பு, திறமை, திறமையின்மை இவற்றைசீர்தூக்கிப் பார்க்கும் போது நடுநிலை உணர்வோடு இரு. உனக்கு நினைவாற்றல் குறைவா? ஒத்துக் கொள். அழகாக, உயரமாக இல்லையா? ஏற்றுக் கொள். உனக்குத் திக்குவாய் குறைஉள்ளதா? ஒத்துக் கொள். எல்லாம் சரியாக வாய்க்கப் பெற்றவர் இந்த உலகில் யாருமில்லை. சாதனை செய்வதற்கு அழகு, நினைவாற்றல் போன்றவை தேவையுமில்லை. நோபல் பரிசு பெறஅழகாக இருக்க வேண்டுமா என்ன? ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல உலக நாடுகளின் பட்டியலை நினைவில் வைக்க வேண்டுமா என்ன?

எதற்காக இந்த சுய விமர்சனம் என்றால், பணிக்கேற்றமனோபாவம், திறமைகள், விருப்பு ஆகியவற்றுடன் பணியில் சேர்ந்தால் அந்தப் பணியில் பணி நிறைவும் மன நிறைவும் பெறலாம். எதற்கும் மனந்தளராதே, திக்குவாய் குறைஉள்ளவர் கூட இடைவிடா முயற்சியால் மற்றும் பயிற்சியால் சிறந்த பேச்சாளராக உருவாக முடியும். ஆசைக்கேற்றதிறமைகள் உன்னுடைய கனவு கருக் கொள்ளும் போது இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டும்.

1. பணியின் மீதுள்ள ஆசை
2. பணிக்கேற்றதிறமைகள்.

கனவு எதற்காக?

கற்பனை செய்து பார். அது ஒரு பன்னாட்டு விமான நிலையம். எந்த ஊருக்குச் செல்கிறோம் என்ற இலக்கு இல்லாமல் ஒரு விமானி அவரது விமானத்தை இயக்கினால் என்னாகும்? வழியில் குறிக்கிட்ட மலை மீது மோதுவார் அல்லது மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்புவார். அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கதி என்னாவது?
மரம் வெட்டி ஒருவர் தானியங்கி இரம்பத்துடன் காட்டுக்குச் செல்கிறார். பல மரங்களைப் பார்க்கிறார். எந்த மரத்தை வெட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லை அவருக்கு. ஒரு மரத்தையும் வெட்டாமல் திரும்புகிறார். அவரிடம் தானியங்கி இரம்பம் இருந்தது. ஆனால் இலக்கு இல்லை. எனவே எதையும் செய்ய முடியவில்லை.

காலை நேரம். உண்டு முடித்து உடையணிந்து புறப்படும் போது இசை வகுப்புக்குச் செல்வதா? விளையாடச் செல்வதா? நண்பனைப் பார்க்கச் செல்வதா? என்று யோசிக்கிறாய். இப்படி குழப்பவாதியாக இருந்தால் எங்கும் செல்ல மாட்டாய்.
உடல்திறனும் அறிவுத்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தாலும், கனவு அல்லது இலக்கு இல்லாவிட்டால் நீ எதையும் சாதிக்க முடியாது.

உன் வாழ்க்கையில் நீ எதை அடைய விரும்புகிறாய்? பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு, அங்கீகாரம் – இவற்றுள் எதை அடைய விரும்பினாலும் நீ செயல்பட வேண்டும்.

உன்னிடம் ஒரு கேள்வி கேள். நான் எதிர் காலத்தில் எப்படி உருவாக வேண்டும்? ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு விமானியாக, ஒரு ஐ.ஏ.எஸ் அலுவலராக, ஓர் ஐ.பி.எஸ் அலுவலராக, ஒரு ஆசிரியராக, ஒரு சமூகப் பணியாளராக, ஒரு நடிகராக, ஒரு இசை அமைப்பாளராக – இவர்களுள் யாராக உருவாக கனவு காண்கிறாய்? எட்டாவது படிக்கும் போது ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எப்படி உருவாக வேண்டும் என தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.

எனவே உன்னிடம் ஒரு கனவு இருந்தால், மீண்டும் மீண்டும் உரக்கச் சொல். உனக்கு நீயே பிரகடனம் செய்து கொள். உன்னிடம் ஒரு கனவு இல்லாவிட்டால் கவலைப்படாதே. உன்னைப் போல் பலர் இருக்கிறார்கள். இந்நூட்களைத் தொடர்ந்து படி. ஓர் இலக்கு, ஒரு கனவு உன்னுள் உருவாகும். இது உறுதி.

இலக்கினில் தெளிவு கொள்

தேவதை நேரில் வந்தால் கூட பலருக்குச் சரியாக வரம் கேட்கத் தெரியாது. ஒரு மனிதர் முன் தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டது. அம்மனிதர் சொன்னார் “ஒரு பை நிறைய பணம், ஒரு பெரிய வாகனம், நிறைய பெண்கள் வேண்டும்”.

தேவதை சொன்னது, “நீ பஸ் கண்டக்டர் ஆகக் கடவாய்”. மனிதர் மண்டை காய்ந்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? உனக்கு என்ன தேவை என்பதைத் தெளிவாக, உறுதியாகக் கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கைநிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் – என்று சொல்லாதே. மாதம் எண்பதாயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று சொல். வழவழ என்று பேசாதே, குறிப்பிட்டுப் பேசு. நீ எதைக் குறிப்பிடுகிறாயோ அது தான் உனக்குக் கிடைக்கும்.
வருடத்திற்குக் குறைந்தது 50 கோடி சம்பாதிப்பேன் என சூளுரைத்தாள் ஒரு பெண்மணி. இன்றைக்கு அப்பெண்மணியின் ஆண்டு ஊதியம் 77 கோடி. அந்தப் பெண்மணி யார் தெரியுமா? சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திராநூயி, பெப்சிகோலா கம்பெனியின் முதன்மை நிர்வாக அதிகாரி.

அண்ணன் தம்பி இருவரும் ஒரு சைக்கிள் கடையில் மெக்கானிக் வேலை பார்த்தனர். ஒரு சிறிய இயந்திரத்தை உருவாக்கி அதில் பறக்கக் கனவு கண்டார்கள். கேள்விப் பட்டோர் அவர்களைக் கேலி செய்தனர். இருவரும் கருமமே கண்ணாக இருந்தனர்.
1903 டிசம்பர் 17-ம் நாள் தாங்கள் கண்டுபிடித்த பறக்கும் இயந்திரத்தில் 6 அடி உயரத்தில் 12 வினாடி பறந்தனர். ஆனால் ஒரு நாளேடு எழுதியது “அவர்கள் flying சகோதரர்கள் அல்லர் laying சகோதரர்கள்”.

இலக்கு என்ற ஒன்று மிகத் தெளிவாக இருந்ததால் அந்த வில்பர் ரைட், ஆலிவர் ரைட் எனப்படும் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த்தார்கள். என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். நீயும் உன் இலக்கில் உறுதியாய் இரு.

பெரிதினும் பெரிது கேள்

“நிலவில் கால்பதிக்கக் குறியாய் இரு, குறைந்தது ஒரு நட்சத்திரத்திலாவது நீ இறங்குவாய்”. ப்ரவுன் லீ என்பாரின் இந்தக் கூற்று ஓர் உத்வேகத்தைத் தருகிறது அல்லவா?

உன்னுடைய உயர்அவா மிக உயர்ந்ததாக இருக்கட்டும். சிறியன சிந்தியாதான் – சிறியனவற்றைச் சிந்திக்காதவன் – என இராமனைக் குறிப்பிடுவார் கம்பர்.

வெறும் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணாதே, நான் ஓர் உலகப்புகழ் பெற்ற இதய நோய் நிபுணராக ஆக விரும்புகிறேன் என்று சொல்.பொறியாளராக வர நினைக்கிறேன் என்று சொல்லாதே. உலகின் மிகச்சிறந்த இராக்கெட் பொறியாளராக வருவதே விருப்பம் எனச் சொல்.விஞ்ஞானியாக வர விரும்புகிறேன் என்று சொல்வதை விட, நோபல் பரிசை வெல்லும் அளவிற்குப் பெரிய விஞ்ஞானி ஆவேன் என்று சொல்.படை வீரனாய் ஆக நினைக்காதே, படைத்தலைவனாக ஆவதற்குக் கனவு காண்.ஏதோ ஒரு வியாபாரம் செய்து வாழலாம் என எண்ணாதே. உலகின் மிகப்பெரிய பணக்கார வியாபாரியாக உயர கனவு காண்.

சாதாரண மனிதர்கள், சாதாரண இலக்கை உடையவராய் இருப்பார்கள். உன்னை மாமனிதன் என்று நினை. பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அதுதான் உனக்குப் பெருமை.

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எப்.கென்னடி ஒரு கனவு கண்டார். முதன் முதலில் ஓர் அமெரிக்கர் நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. பத்து ஆண்டுகளுக்குப் பின் 1969. ஜூலை 20 ம் தேதி அவரது கனவு கைகூடியது. கனவு நிறைவேறிய பொழுது கென்னடி உயிரோடில்லை.

நிலவில் கால் தடம் பதித்ததும், அந்த வரலாற்று நாயகர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்போது அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சனிடம் அலைப்பேசி மூலம் கூறிய செய்தி இதுதான்.

நான் இந்த நிலவுப்பரப்பில் வைத்தது ஒரு காலடி, ஆனால் இது மனித இனத்தின் பெரும் பாய்ச்சலுக்குச் சமமாகும். ஒரு சாதனை நீ படைத்தால் அது உனக்கு ஒரு காலடி, ஆனால் உனது குடும்பத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். ஆக ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்ததை, பின்னொரு காலத்தில் சில சாதனையாளர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். எனவே நீயும் சாதிக்கலாம். இலக்கு உன்னுடையது. அதை பிறர் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது உன்னிடமிருந்து பறிக்கவோ முடியாது.

பெரிதாய் எண்ணுவது அல்லது எண்ணுவதில் கூட கஞ்சத்தனம் காட்டுவது உன்னைப் பொறுத்தது. சாதிக்க வேண்டும் என்னும் வெறியுடன் உழைக்கும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வானமும் கைக்கெட்டும் தூரந்தான். எனவே பெரிதாக எண்ணு, பெரிதாகச் செய், அப்படிச் செய்தால் பெரிதாகச் சாதிப்பாய், இது உறுதி.

செயல்வெறி

இங்கு வெறி என்பதை burning desire என்ற பொருளில் குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற மருத்துவராக வேண்டும் என்பது உன் கனவு என்றால், அந்த கனவு நனவாக உன் ஆழ்மனதில் எப்போதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டிய உள்ளார்ந்த விழிப்புணர்வு நிலைதான் செயல்வெறி என்பது.

வெறியும் ஆசையும் ஒன்றல்ல, யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். வெறி இல்லாவிடின் ஆசை நிராசையாகி விடும்.
எதுவும் தானாக நிகழ்வதில்லை, நாம் முயன்று நிகழ்த்த வேண்டும். வெறும் ஆசையும் நல்ல நோக்கமும் ஒருவனை பெரிய மனிதனாய் ஆக்கிவிட முடியாது. செயலாக்கமும், செயல்வெறியும் இருப்போரே வெற்றியடைகிறார்கள். செயல்படுவோருக்கு மட்டுமே கருதிய காரியம் கைகூடும். எந்த ஒன்றுக்கும் ஒரு விலை உண்டு. வெற்றியாளர்கள் அவ்விலையைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

வெற்றியாளர்களிடம் இலக்கு இருக்கிறது. வெற்று மனிதர்களிடம் வெறும் ஆசை இருக்கிறது. என்பது நாமறிந்த பொன்மொழி.
வெறி கொள், வெற்றி கொள்.

அமெரிக்க நாட்டின் ஒரு புறநகர்ப்பள்ளி. அங்கு பணியாற்றிய ஆசிரியர் தன் வகுப்பு மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
“நீ என்னவாக வர விரும்புகிறாய்?”

“நான் பெரிய குதிரைப் பண்ணை உரிமையாளராக வர விரும்புகிறேன்”.

ஆசிரியருக்கு ஒரே வியப்பு. ஓர் எளிய மெக்கானிக்கின் மகனுக்கு எவ்வளவு பெரிய ஆசை. அவர் சொன்னார்:
தம்பி ஒரு குதிரையை வளர்க்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? இதை விடுத்து வேறு ஏதேனும் ஆசை உள்ளதா?

இல்லை, ஐயா. நான் குதிரைகள் வளர்க்கவே விரும்புகிறேன்.

நீ நம்ப மாட்டாய். அந்த மான்ட்டி ராபர்ட் தான் இன்று உலகின் மிகப்பெரிய குதிரைப் பண்ணைக்குச் சொந்தக்காரர்.

செய் அல்லது செத்து மடி – இந்த எழுச்சி வாசகம் ஜப்பானியரிடத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஜப்பானிய படைவீரர் எதிரியிடம் எப்போதும் சரணடையமாட்டார். அந்த நிலை வந்தால், தன் வயிற்றைப் போர்வாளால் கிழித்து, தன் இதயத்தில் வாளைச் சொருகி, உயிரை மாய்த்து கொள்வார். இதற்கு ‘செப்பாகு’ என்று பெயர்.

அந்த நாட்டின் படித்த இளைஞர்கள் கூட பெரிய பல்கலைக் கழகங்களில் தாம் விரும்பிய படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். காரணம் மேற்குறிப்பிட்ட போர் வீரனின் குணம் அந்த நாட்டு இளைஞர்களின் இரத்தத்தில் ஊறியுள்ளது. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, தற்கொலையை ஒரு தீர்வாகக் கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களுடைய மன உறுதியை மட்டும் எடுத்துக் கொள்.

இந்த மலையை ஒத்த மன உறுதியால் தான் 1894-ல் சீனப் படையையும், 1905-ல் இரஷ்யப் படையையும் தோல்வியடையச் செய்தார்கள். எனவே அவர்களைப் போல் வெறி கொள், வெற்றி கொள்.

முழுதும் வாசிக்க, இன்றே இந்த நூலை வாங்கி, வாசித்து பயன் பெறுங்கள். வாழ்த்துக்கள்..

Monday, 20 August 2012

ஈகைத் திருநாளே வருக.. ஈருலகிலும் நன்மைகள் தருக !


கட்டுரையாளர். A.M.D முஹம்மது சாலிஹ் ஹுசைன் M.B.A., B.G.L., (கீழை இளையவன்)

(20.08.2012 தேதியிட்ட தின மலர் நாளிதளின் 'ரம்ஜான் மலரில்' வெளி வந்த கட்டுரை)

முன்னுரை :

மனித வாழ்க்கையின் அகத்தையும், புறத்தையும் தூய்மை அடைய செய்திட்ட நோன்பென்னும் 'பயிற்சிக் களம்' கணப் பொழுதில் நம்மை விட்டு நகர்ந்து விட்டது, நேற்று தான் பிறை பார்க்கப்பட்டு, முதல் நோன்பு துவங்கியது போல் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் முப்பது நோன்புகளையும் வழியனுப்பி விட்டு, இந்நன்னாளில் பிரியா விடையுடன் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தருணத்தில் நோன்பு என்ற முழு நேர பயிற்சி பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட உண்மை விசுவாசிகள், தாங்கள் ரமலான் மாதம் முழுதும் கற்றதும், பெற்றதும், அவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் முழுமையும் பெற வேண்டிய படிப்பினைகளை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கிறது.


இன்றைய உலகில் பல இன்னல்களுக்கு மூலக் காரணமாக இருக்கும் மனிதனின் மனதினை, முப்பது நாட்களும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் இறையச்சத்துடன் சகோதரத்துவ சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர். இதன் மூலம் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழும் பண்பினை, இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இவர்களுடன் உறவாடும் அனைத்து சமுதாயத்தினரும் பெறுகின்றனர்.

தூய்மையை வரவேற்கும் வாயில்கள்

மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது. இறைவன் தனது திருமறையில் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம்  வசனத்தில் பின் வருமாறு கூறுகிறான். 
"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து நோன்பு என்பது தூய்மையை வரவேற்கும் வாயிலாக இருப்பது புலனாகிறது.

வீணான காரியங்களை புறந்தள்ளும் நோன்பு :

"யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' என்ற முஹம்மது நபிகளாரின் பொன் மொழியைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும் பெறுவதோடு தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி கிடைக்கிறது.

நோன்பு வைத்திருந்த காலங்களில் பொய் பேசுவதும், புறம் பேசுவதும், வீணான காரியங்களில் ஈடுபடுவதும் முழுமையாக தடுக்கப்படும் காரணத்தால் மனிதன் பிறரை பற்றிய தீய எண்ணங்களிலிருந்து விலகி, தன்னைப் பற்றிய சிந்தனையால் சுயக் கட்டுப்பாட்டோடு, தனித் தன்மையோடு திகழ்கிறான்.

 மனதை கட்டுப்படுத்தும் கடிவாளம் :

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன் பக்கம் வழிகாட்டி அழைத்துச் செல்லவும் ஏதுவாகிறது. நோன்பு வைத்திருக்கும் பொழுதுகளில், தங்களிடம் யாரேனும் வீண் சச்சரவுகளுக்கு வந்தாலும் கூட 'நான் நோன்பாளி' என்று விலகி கொள்ளும் போருமைதனை படிப்பினையாக பெறுகின்றனர். 

நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடை விதித்திருப்பதால், உண்ணாமல் விலகி இருக்கும் பயிற்சியை பெற்றவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' எனும் உன்னத கோட்பாட்டை கடை பிடிக்கும் மனப்பக்குவத்தை இந்த நோன்பினால் பெற்று விடுகின்றனர்.

ஆணவத்தை வேரறுக்கும் ஆயுதம் :

நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.  ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், மனைவியிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. ஆகவே நோன்பு காலங்களில் இவற்றை தவிர்த்திருப்பதால், ஆணவம் ஒழிவது சாத்தியப்படுகிறது. 

நோன்பு வைத்திருக்கும் நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. இதனால் உள்ளச்சத்தோடு தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதால், 'தான்' என்ற ஆணவமும், மமதையும் வேரோடு அழிக்கப்படுகிறது.

 மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் மாண்பு :

ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய திருநாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம். பல அரசியல் கட்சிகள்,  நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே. இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.

ஏழைகளின் பசி உணர்த்தும் ஆசான் :

நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது. வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. ஏழைகளை அலட்சியம் செய்யும் போக்கு மாறுகிறது. ஏழை, எளியவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த பயிற்சி கிடைக்கிறது.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறரை மணிவரை ஏறத்தாழ பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மிகுந்த உள்ளச்சத்துடன் கடைபிடிப்பதாலும், தங்களை சுற்றிலும் உணவுகள் புழங்கும் நிலையிலும், நோன்பை நிறைவேற்றுவது, ஏழை எளிய மக்கள் பசியால் படும் இன்னல்களை உண்மையாக உணர முடிகிறது.

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.

தர்மத்தின் திருநாள் - நோன்புப் பெருநாள் :

ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது. அது தான் இறைவனின் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் ஜகாத் என்னும் ஏழை வரி. இஸ்லாமிய பெருமக்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். 
 
உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழை வரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் இந்த ரமலான் மாதத்தில் தான். இதன் மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஜகாத் எனும் ஏழை வரியை கொடுத்து விடுமாறு அறிவுறுத்தும் நபி மொழியை நிறைவேற்றி, அக மகிழ்வோடு கொண்டாடும் திரு நாளாக, இந்த நோன்புப்  பெருநாள் சிறப்புறுகிறது.

 முடிவுரை :

இனம், மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் கூட, மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு. இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்று கூடி கூட்டுத் தொழுகையை  நிறைவேற்றி  ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் நிலைத்திருந்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும். இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைத் தான் ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள்.
 
ரமலான்  நோன்பு இருப்பதில், மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பயிற்சி, அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை. ஆகவே கடந்து சென்ற நோன்பு காலம் முழுமையும் இஸ்லாமிய பெருமக்கள் கற்ற வாழ்க்கை நெறிகளும், பெற்ற உள்ளார்ந்த அறிவுசார் சிந்தனைகளின் சாரங்களும், வாழ் நாள் முழுவதும் தமக்கு மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆசானாக துணை நின்று, நன்மைகளின் பக்கம் வழி நடத்தி செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஈகைத் திருநாளின் இந்த நல்ல தருணத்தில், இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை கொண்டாடி அகம் மகிழும் அனைவருக்கும் இனிய 'ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்'.