Friday, 13 April 2012

'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ் !

இன்று (13.04.2012) சித்திரை பிறந்து விட்டது. கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இருக்கின்ற வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருந்தால் இல்லாத மின்சாரம் வறுத்தெடுக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்க இருக்கிறது. அதாவது மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது.




இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை என பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல வழி முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது. 




குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர் சத்துகள் நிறைந்ந ஆகாரங்கள் என பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. இந்த வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ்.

    * இளநீர், எலுமிச்சை சாறு, நீர் மோர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

    * கம்மங்கூழ், முளைவிட்ட தானியங்கள், காய்கறி சாலட், பழங்கள், தேன், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

    * கோழி இறைச்சி, கேழ்வரகு, அன்னாசி பழம், மிளகாய் போன்றவற்றையும், ஊறுகாய்,அப்பளம், மற்றும் எண்ணையில் வறுத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.



    * தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி ஊற வைத்து குடித்தல் நல்லது.

    * பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    * சோப்பிற்கு பதிலாக வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்த கலவையை உடலில் பூசி குளித்தால், நோய் கிருமிகள் உடலை நெருங்காது.

    * பெண்களுக்கு சருமத்தில் ஏற்ப்படும் கருமையை போக்க, உருளைக் கிழங்கு சாறை பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    * கோடைகாலத்தில் ஏற்ப்படும் தொற்றுநோய், பொடுகு தொல்லைகளிலிருந்து விடுபட வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின் குளிக்க வேண்டும்.

    * இரவு தூங்க போகுமுன் சந்தனத்தை மார்பு, கழுத்து, மற்றும் கைகளில் பூசிக்கொண்டால், வியர்வை நாற்றத்திலிருந்து தப்பலாம்.

    * சீத்தளி என்ற மிகமிக எளிதான மூச்சு பயிற்சியை தினமும் இருவேளை செய்து வந்தால், உடலை ஜில்லென வைத்துக்கொள்ளலாம்.




கோடைத் தொல்லைகளை வெல்வதற்கு வெள்ளரி பிஞ்சுகளும் உறுதுணையாக இருக்கின்றது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் கொண்டது வெள்ளரிக்காய்.

வெள்ளரியில் உள்ள சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அடங்கியுள்ளது .

Sunday, 8 April 2012

தெரிந்து கொள்வோம் - அறிஞர் அண்ணாவின் வியக்க வைக்கும் ஆங்கிலத்திறமை !

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.




அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.





ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!





ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாஸ்' (Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.



அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.




சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?

சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

"ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ"

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

"I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO"





அறிஞர் அண்ணா ஒரு முறை அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.
உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

Tuesday, 3 April 2012

தெரிந்து கொள்வோம் ! - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.


ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.


பத்தாம் வகுப்பு,  +2 போன்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.
 

  "நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது " என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.


1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். 




 
இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் பிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.


முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.



காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.



ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 


14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

 


உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.



1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.
 
 

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.



அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.