புதுக் கல்லூரி குறித்து கல்லூரியின் முன்னாள் மாணவர், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர். நண்பர். எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தன் முக நூலில் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
4900 மாணவர்கள், 250 பேராசிரியர்கள், 150 ஊழியர்களுடன் அழகான கட்டிடங்களுடன் மாநகரின் மையப்பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது எங்கள் புதுக்கல்லூரி! சென்னை மாநகரின் 'டாப் 5 ' கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இதை தமிழ்நாட்டின் 'கேம்பிரிட்ஜ்' எனலாம்.
4900 மாணவர்கள், 250 பேராசிரியர்கள், 150 ஊழியர்களுடன் அழகான கட்டிடங்களுடன் மாநகரின் மையப்பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது எங்கள் புதுக்கல்லூரி! சென்னை மாநகரின் 'டாப் 5 ' கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இதை தமிழ்நாட்டின் 'கேம்பிரிட்ஜ்' எனலாம்.
மெஸ் மேனேஜர் குட்டன் அவர்களுடன் நண்பர். தமீமுன் அன்சாரி
இங்கே படித்த பிரபலங்கள் ஏராளம். சிராஜுல் மில்லத் அப்துல் சமது, ஜி.கே. வாசன், டி.ஆர். பாலு, டாக்டர் கே.வி.ஏஸ். ஹபீப் முஹம்மத், பேரா.ஜவாஹிருல்லா, சரத்குமார், கார்த்திக், பி.வாசு, ராதாரவி, சாலவுதீன் (ஈடிஏ) என அரசியல், சமுகம், சினிமா, இலக்கியம், வணிகம் என பல்வேறு துறைகளை சார்ந்த வித்தகர்கள் உருவாகிய பாசறை.
பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஆண் அழகர்கள் என புதுக்கல்லூரி மாணவர்கள் குறித்து பிறக் கல்லூரி மாணவர்களிடம் ஒரு பொறாமை உண்டு. ஆனால் இங்கே சமானியர் வீட்டுப் பிள்ளைகள் சரிபாதி பேர் படிக்கிறார்கள் என்பதே உண்மை.
கடந்த 3 மாதங்களாக கல்லூரியின் துணை முதல்வர் அப்துல் கபூர் சார் அவர்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்புவிடுத்த வண்ணம் இருந்தார். நேற்று (23.08.2013) ஜூம்மா தொழுகைக்கு வருவதாக கூறி, அவ்வாறே சென்றேன்.
அங்கு ஜூம்மாவுக்கு செல்லும்போதேல்லாம் முன்னால் மாணவ நண்பர்களை சந்தித்து மகிழ முடியும். நினைத்தவாரே பல சந்திப்புகள் நிகழ்ந்தது.
தொழுகைக்கு பிறகு துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களோடு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடினோம். கல்லூரி தொடங்கி 60 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கான விழா குறித்தும், முன்னாள் மாணவர்கள் ஆகிய எங்களின் பங்களிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
60 ஆண்டுகளை நினைவுகூறும் பொருட்டு கட்டப்பட்டுவரும் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்திற்கு நான் முடிந்தளவு நிதி திரட்டித் தர வேண்டும் என கபூர் சார் வேண்டுகோள் விடுத்தார்.
கட்சிக்கு நிதி திரட்டுவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இதுவேறு புது சுமையா? என தயங்கினேன். நாம் படித்த கல்லூரிக்கு நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் என்று நினைத்து ஒப்புக்கொண்டேன்.
விழாவிற்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை அழைக்கும் திட்டம் உள்ளதாகவும், ஹஜ் பெருநாளை பிறகு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுவதாகவும் கூறினார்கள்.
பிறகு சிங்கப்பூர், மலேசியா, துபாய் (அமீரகம்) உள்ளிட்ட நாடுகளில் புதுக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தை தொடங்குவது குறித்தும் பேசினோம். முதல்கட்டமாக சிங்கப்பூர், மலேசியாவில் கட்டமைக்கும் பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்றும், அதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை விரைவில் தருவதாகவும் கபூர் சார் கூறினார். பிறகு எல்லோரும் இணைந்து துபாய்க்கு செல்வோம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இச்சந்திப்புக்கு பிறகு நாங்கள் வாழ்ந்து மகிழ்ந்து ஊஞ்சல் ஆடிய புதுக்கல்லூரி வடுதிக்கு சென்றேன். ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் அன்றும் இன்றும் கூடி வாழும் சோலை அது.
பழைய நினைவுகள் வாட்டின. அறை எண்கள்: 37,44,57,84 என நான் தங்கியிருந்த இடங்களை ஏக்கத்துடன் பார்த்தேன். நண்பர்களின் முகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. சன்னல் கண்ணாடியை அலகினால் கொத்தி உரசி வீட்டிற்குள் செல்லத் துடிக்கும் சிட்டு குருவியை போல என் கண்கள் அலைபாய்ந்தன.
எத்தனை எத்தனையோ ஞாபகங்கள் குமுறி எழுந்தன.. சிரித்துப் பேசிய பொழுதுகள், சீனியர்- ஜீனியர்களுடன் உறவாடிய இடங்கள், ஒடி விளையாடிய இரவுகள், எழுச்சியுரையாற்றி சமூகநீதி போராட்டங்களுக்கு மாணவர்களை திரட்டிய பரபரப்பான நாட்கள், விவாதங்கள் நடத்திய அந்திப் பொழுதுகள், சின்னச் சின்ன சண்டைகள், கவிதைகளை எழுதிக் குவித்த புல்வெளி, கூடியமர்ந்து கும்மியடித்த கிணற்றடி நட்சத்திரங்களை ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி, உணவருந்தி மகிழ்ந்த 'மெஸ்' என நினைவுகள் கால் பந்துகளாய் மாறி நெஞ்சத்தை உதைத்து விளையாடின.
அங்குள்ள ஊழியர்கள் உற்சாகத்தோடு வரவேற்றார்கள் 46 ஆண்டு காலமாய் 'மெஸ்' மேனஜராக இருக்கும் குட்டனை சந்தித்தேன். அவர் ஒரு கேரளக்காரர். இவர் புதுக்கல்லூரி பின்பற்றிவரும் மதச்சார்பின்மையின் அடையாளம். அப்போது நேரம் மாலை 4.30 ஆகியிருந்தது. மாணவர்கள் தேனீர் அருந்த 'மெசுக்கு' வந்த வண்ணம் இருந்தனர். பலர் என்னை அடையாளம் கண்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
களவாடிய பொழுதுகளை, ஆடோகிராப் நினைவுகளோடு சுமந்துக்கொண்டு விடுதியை திரும்பிபார்த்துக்கொண்டே புறப்பட்டேன்.
மாலை நேரம் என்பதால் கல்லூரி வளாகம் பரபரப்பாக இருந்தது. நாமும் இப்படிதானே வசந்த கால பறவைகளாய் பாடித் திரிந்தோம்...அந்த நாட்கள் மீண்டும் வராதோ... என மனம் துடித்தது
மார்க்கம், சமுதாயம், அரசியல், இலக்கியம், ஆளுமை, துணிச்சல், என அனைத்தையும் கற்றுக்கொடுத்த 'அறிவுசோலை'யில் சில மணிநேரங்களை கழித்த திருப்தியோடு, நகர மனம் இன்றி நகர்புற பரபரப்புகளை நோக்கி நகர்ந்தேன்.
உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் நண்பர்களே.. நீங்கள் எல்லாம் நலம்தானா? உங்களுக்காக ஒரு நினைவேந்தல் கவிதையை தருகிறேன்..
புதுக் கல்லூரி...
நாங்கள் புத்துணர்ச்சி பெற்ற
கொடைக்கானல்!
டால்பின்களாய் நீந்தி மகிழ்ந்த
அறிவுக் கடல்!
ஒரு கூட்டுப் பறவைகளாய்
சிறகடித்த வேடந்தாங்கல்!
கவலைகளே இல்லாமல்
சுற்றித் திரிந்த சமவெளி!
அந்த திருவிழா நாட்கள்
ஒரு வாடகை வசந்தம்!
அந்தப் பூவாசம்
மீண்டும் மணக்காதோ...
பூங்காற்று திரும்பாதோ...
வசந்த கால நினைவுகளுடன்,
எம். தமிமுன் அன்சாரி