வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். பெண்களின் உரிமை பாரதத்தின் வலிமை என்பதை மனதில் வைத்து, ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைக்கிணங்க, பெண்ணுரிமை ஓங்கட்டும்! பெண்ணடிமை ஒழியட்டும்! என்று நெஞ்சார வாழ்த்திமுதலில் அனைத்து மகளிருக்கும் எமது . கீழை இளையவன் வலை தளம் சார்பில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வதேச மகளிர் தினம் இன்று (08.032012) வியாழக் கிழமை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நம் கீழக்கரை நகரிலும், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக இன்று கருத்தரங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நம் கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார்கள்.
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா... என்ற பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில், இன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி, மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னமும், பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் இப்போது எளிமையாகக் கொடாடி மகிழலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.
இந்த நிலையில்தான் 1857ஆம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.
1911 ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, இது நூறாவது சர்வதேச மகளிர் தினமாகும் என்ற வகையில் இன்றைய தினம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நாடும் நிறுவனங்களும் பல்வேறு தொனிப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை இவ்வருடம் "கல்வி, பயிற்சி மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு, பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி" எனும் தொனிப்பொருளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
கடந்த நூற்றாண்டில், 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஊதியத்தை அதிகரிக்கவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குமாறும் கோரி சுமார் 15000 பெண்கள் பேரணியொன்றை நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.
1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சி பெப்ரவரி 28 ஆம் திகதியை தேசிய மகளிர் தினமாக பிரகடனப்படுத்தி அமெரிக்கா முழுவதும் கொண்டாடியது. 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் நடந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டின்போது ஜேர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவியான கிளாரா ஸெட்கிட், மகளிர் தினத்தை சர்வதேச ரீதியாக கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.
இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய முதல் தடவையாக நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
1848 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலான நாடுகளில் புரட்சி அலை வீசியபோது பிரஷ்யாவின் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பகுதி) மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்த தினம் மார்ச் 19 ஆம் திகதியாகும் என்பதே அது பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது. (மேற்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது வேறு கதை)
நியாயமான ஊதியம், சிறந்த வேலைத் தள சூழல் ஆகியவற்றுக்காக பெண்கள் இத்தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதனிடையே 1911 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 146 பெண்கள் உயிரிழந்தை பெண் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்பான கவனத்தை அதிகரித்திருந்தது.
ஆனால், உலகெங்கும் ஒரே சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஏன் மார்ச் 8 ஆம் தேதி?
1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அக்காலத்தில் ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.
1917 ஆம் ஆண்டு ரஷ்யாவின் பெப்ரவரி புரட்சியின் போது மகளிர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக திரண்ட பெண்கள், ஸார் மன்னருக்கெதிராக போராட்டம் நடத்தி அப்புரட்சியிலும் பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது. 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் அவ்வருடம் முதல் தடவையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஐ.நா. அனுசரணை வழங்க ஆரம்பித்தது.
தற்போது, ரஷ்யா, உக்ரேன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், பெலாரஸ், புர்கினா பெஸோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஸகஸ்தான், மோல்டோவா, மொங்கோலியா, மொன்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் உத்தியோகபூர்வ விடுமுறை தினமாகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சீனா, நேபாளம், மடகஸ்கார் ஆகிய நாடுகளில் இத்தினம் பெண்களுக்கு மாத்திரம் விடுமுறை வழங்கப்படுகிறது.
தொழிலாளர் படையைப் பொறுத்தவரை இலங்கையில் பாலின சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. இவ்விடயத்தில் அதிக இடைவெளி கொண்ட நாடுகளில் இலங்கை 20 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் மகளிர் சுதந்திரம்
"இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லை", "இஸ்லாம் பெண்களை அடிமையாக நடத்துகிறது", "பர்தா பெண்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது" என்பதெல்லாம் இவர்களின் போலிக் கருத்துப்பிரச்சாரங்கள். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் வளர்ச்சி தட்டுப்பட்டுவிடாது. இவர்களுக்கு வேண்டுமானால் உலக மகளிர் தினத்தில் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமைகள் பற்றியும், சுதந்திரம் பற்றியும் விவாதிக்க மார்ச்-8 தேவைப்படலாம்.
பெண்உரிமை பற்றியும், பெண் வாழ்க்கைத் திட்டம் பற்றியும், பெண்ணியத்தின் கண்ணியம் பற்றியும் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டுவிட்டது. ஆண் பெண் கலத்தல் இல்லாமல் பெண்கள் கல்வி கற்பதிலோ, பணிபுரிவதிலோ எந்தத் தவறுமில்லை. தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலும் கணிசமாக முன்னேறி வந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கான சூழல்களும் உருவாகிக்கொண்டுதான் வருகின்றன. இஸ்லாமிய சமுதாய அமைப்பு இத்தகைய முன்னேற்றங்களை தங்களின் கடமையான எண்ணி செய்யவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, இல்லற வாழ்க்கையில் பெண்கள், ஆண்களைவிடச் சற்று அதிகமான பொருப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக்கொள்வது பெண்கள். ஒவ்வொறு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள் தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.
சமஉரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண்எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்றில்லை அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம். இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை.
முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவில் பின்தங்கியிருக்கிறார்கள், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் இதற்குக் காரணமாக "பர்தா முறை" பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மேற்கோளிடுகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு, அரசு வேலைவாய்ப்பு போன்றவைகளில் பின்தங்கியிருப்பது ஏற்கவேண்டிய ஒன்றுதான்.
இக்கருத்தில் கூறப்படுவதுபோல பெண்கள் மட்டும் அல்ல, முஸ்லிம் ஆண்களும் கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்புகளில் பின்தங்கியே இருக்கிறார்கள். காரணம் முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களால் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒடுக்கப்படுகிறது என்பதே உண்மை.
உதாரணமாக இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராடிவருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாறவேண்டுமானால் முஸ்லிம்களும் கல்வி நிலையில் உயரவேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும். அரசு வேலைவாய்ப்புகள் முதல் அரசியல் வரை முஸ்லிம்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆண், பெண் கலத்தல் மூலம் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கான வழிகளை இஸ்லாம் அடைக்கிறதே தவிர, பெண்களின் முன்னேற்றத்தையோ, சுதந்திரத்தையோ அல்ல.
No comments:
Post a Comment