கட்டுரையாளர். A.M.D முஹம்மது சாலிஹ் ஹுசைன் M.B.A., B.G.L., (கீழை இளையவன்)
(20.08.2012 தேதியிட்ட தின மலர் நாளிதளின் 'ரம்ஜான் மலரில்' வெளி வந்த கட்டுரை)
முன்னுரை :
மனித வாழ்க்கையின் அகத்தையும், புறத்தையும் தூய்மை அடைய செய்திட்ட நோன்பென்னும் 'பயிற்சிக் களம்' கணப் பொழுதில் நம்மை விட்டு நகர்ந்து விட்டது, நேற்று தான் பிறை பார்க்கப்பட்டு, முதல் நோன்பு துவங்கியது போல் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் முப்பது நோன்புகளையும் வழியனுப்பி விட்டு, இந்நன்னாளில் பிரியா விடையுடன் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த தருணத்தில் நோன்பு என்ற முழு நேர பயிற்சி பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட உண்மை விசுவாசிகள், தாங்கள் ரமலான் மாதம் முழுதும் கற்றதும், பெற்றதும், அவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் முழுமையும் பெற வேண்டிய படிப்பினைகளை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
இன்றைய உலகில் பல இன்னல்களுக்கு மூலக் காரணமாக இருக்கும் மனிதனின் மனதினை, முப்பது நாட்களும் ஒருமுகப்படுத்துவதன் மூலம் இறையச்சத்துடன் சகோதரத்துவ சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர். இதன் மூலம் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழும் பண்பினை, இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இவர்களுடன் உறவாடும் அனைத்து சமுதாயத்தினரும் பெறுகின்றனர்.
தூய்மையை வரவேற்கும் வாயில்கள்
மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது. இறைவன் தனது திருமறையில் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில் பின் வருமாறு கூறுகிறான்.
"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து நோன்பு என்பது தூய்மையை வரவேற்கும் வாயிலாக இருப்பது புலனாகிறது.
வீணான காரியங்களை புறந்தள்ளும் நோன்பு :
"யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' என்ற முஹம்மது நபிகளாரின் பொன் மொழியைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும் பெறுவதோடு தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி கிடைக்கிறது.
நோன்பு வைத்திருந்த காலங்களில் பொய் பேசுவதும், புறம் பேசுவதும், வீணான காரியங்களில் ஈடுபடுவதும் முழுமையாக தடுக்கப்படும் காரணத்தால் மனிதன் பிறரை பற்றிய தீய எண்ணங்களிலிருந்து விலகி, தன்னைப் பற்றிய சிந்தனையால் சுயக் கட்டுப்பாட்டோடு, தனித் தன்மையோடு திகழ்கிறான்.
மனதை கட்டுப்படுத்தும் கடிவாளம் :
நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன் பக்கம் வழிகாட்டி அழைத்துச் செல்லவும் ஏதுவாகிறது. நோன்பு வைத்திருக்கும் பொழுதுகளில், தங்களிடம் யாரேனும் வீண் சச்சரவுகளுக்கு வந்தாலும் கூட 'நான் நோன்பாளி' என்று விலகி கொள்ளும் போருமைதனை படிப்பினையாக பெறுகின்றனர்.
நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடை விதித்திருப்பதால், உண்ணாமல் விலகி இருக்கும் பயிற்சியை பெற்றவர்கள், "பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' எனும் உன்னத கோட்பாட்டை கடை பிடிக்கும் மனப்பக்குவத்தை இந்த நோன்பினால் பெற்று விடுகின்றனர்.
ஆணவத்தை வேரறுக்கும் ஆயுதம் :
நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், மனைவியிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. ஆகவே நோன்பு காலங்களில் இவற்றை தவிர்த்திருப்பதால், ஆணவம் ஒழிவது சாத்தியப்படுகிறது.
நோன்பு வைத்திருக்கும் நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. இதனால் உள்ளச்சத்தோடு தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதால், 'தான்' என்ற ஆணவமும், மமதையும் வேரோடு அழிக்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் மாண்பு :
ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய திருநாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.
நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள் அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம். பல அரசியல் கட்சிகள், நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே. இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.
ஏழைகளின் பசி உணர்த்தும் ஆசான் :
நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது. வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. ஏழைகளை அலட்சியம் செய்யும் போக்கு மாறுகிறது. ஏழை, எளியவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த பயிற்சி கிடைக்கிறது.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறரை மணிவரை ஏறத்தாழ பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மிகுந்த உள்ளச்சத்துடன் கடைபிடிப்பதாலும், தங்களை சுற்றிலும் உணவுகள் புழங்கும் நிலையிலும், நோன்பை நிறைவேற்றுவது, ஏழை எளிய மக்கள் பசியால் படும் இன்னல்களை உண்மையாக உணர முடிகிறது.
ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.
தர்மத்தின் திருநாள் - நோன்புப் பெருநாள் :
ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது. அது தான் இறைவனின் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் ஜகாத் என்னும் ஏழை வரி. இஸ்லாமிய பெருமக்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர்.
உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழை வரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் இந்த ரமலான் மாதத்தில் தான். இதன் மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.
நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஜகாத் எனும் ஏழை வரியை கொடுத்து விடுமாறு அறிவுறுத்தும் நபி மொழியை நிறைவேற்றி, அக மகிழ்வோடு கொண்டாடும் திரு நாளாக, இந்த நோன்புப் பெருநாள் சிறப்புறுகிறது.
முடிவுரை :
இனம், மொழி, கலாச்சாரம் வேறுபட்டாலும் கூட, மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு. இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்று கூடி கூட்டுத் தொழுகையை நிறைவேற்றி ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் நிலைத்திருந்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும். இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைத் தான் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு இருப்பதில், மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பயிற்சி, அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை. ஆகவே கடந்து சென்ற நோன்பு காலம் முழுமையும் இஸ்லாமிய பெருமக்கள் கற்ற வாழ்க்கை நெறிகளும், பெற்ற உள்ளார்ந்த அறிவுசார் சிந்தனைகளின் சாரங்களும், வாழ் நாள் முழுவதும் தமக்கு மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆசானாக துணை நின்று, நன்மைகளின் பக்கம் வழி நடத்தி செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஈகைத் திருநாளின் இந்த நல்ல தருணத்தில், இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை கொண்டாடி அகம் மகிழும் அனைவருக்கும் இனிய 'ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்'.
No comments:
Post a Comment