Friday, 13 April 2012

'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ் !

இன்று (13.04.2012) சித்திரை பிறந்து விட்டது. கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இருக்கின்ற வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருந்தால் இல்லாத மின்சாரம் வறுத்தெடுக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்க இருக்கிறது. அதாவது மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது.




இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை என பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல வழி முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது. 




குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர் சத்துகள் நிறைந்ந ஆகாரங்கள் என பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. இந்த வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ்.

    * இளநீர், எலுமிச்சை சாறு, நீர் மோர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

    * கம்மங்கூழ், முளைவிட்ட தானியங்கள், காய்கறி சாலட், பழங்கள், தேன், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

    * கோழி இறைச்சி, கேழ்வரகு, அன்னாசி பழம், மிளகாய் போன்றவற்றையும், ஊறுகாய்,அப்பளம், மற்றும் எண்ணையில் வறுத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.



    * தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி ஊற வைத்து குடித்தல் நல்லது.

    * பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    * சோப்பிற்கு பதிலாக வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்த கலவையை உடலில் பூசி குளித்தால், நோய் கிருமிகள் உடலை நெருங்காது.

    * பெண்களுக்கு சருமத்தில் ஏற்ப்படும் கருமையை போக்க, உருளைக் கிழங்கு சாறை பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    * கோடைகாலத்தில் ஏற்ப்படும் தொற்றுநோய், பொடுகு தொல்லைகளிலிருந்து விடுபட வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின் குளிக்க வேண்டும்.

    * இரவு தூங்க போகுமுன் சந்தனத்தை மார்பு, கழுத்து, மற்றும் கைகளில் பூசிக்கொண்டால், வியர்வை நாற்றத்திலிருந்து தப்பலாம்.

    * சீத்தளி என்ற மிகமிக எளிதான மூச்சு பயிற்சியை தினமும் இருவேளை செய்து வந்தால், உடலை ஜில்லென வைத்துக்கொள்ளலாம்.




கோடைத் தொல்லைகளை வெல்வதற்கு வெள்ளரி பிஞ்சுகளும் உறுதுணையாக இருக்கின்றது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் கொண்டது வெள்ளரிக்காய்.

வெள்ளரியில் உள்ள சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அடங்கியுள்ளது .

Sunday, 8 April 2012

தெரிந்து கொள்வோம் - அறிஞர் அண்ணாவின் வியக்க வைக்கும் ஆங்கிலத்திறமை !

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.




அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.





ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!





ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாஸ்' (Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.



அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.




சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?

சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

"ஐ நோ யுனொ.
யு நோ யுனொ.
ஐ நோ யு நோ யுனொ
பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ"

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

"I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO"





அறிஞர் அண்ணா ஒரு முறை அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.
உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

Tuesday, 3 April 2012

தெரிந்து கொள்வோம் ! - இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.


ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.


பத்தாம் வகுப்பு,  +2 போன்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.
 

  "நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது " என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.


1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். 




 
இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் பிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.


முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.



காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.



ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 


14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

 


உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.



1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.
 
 

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.



அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

Thursday, 8 March 2012

இ‌ன்று ( 08.03.2012) உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்! - 'பெண்ணடிமை சாத்திரங்கள் ஒழிப்போம்' கட்டுரையாளர் கீழை இளையவன்

வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம். பெண்களின் உரிமை பாரதத்தின் வலிமை என்பதை மனதில் வைத்து, ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைக்கிணங்க, பெண்ணுரிமை ஓங்கட்டும்! பெண்ணடிமை ஒழியட்டும்! என்று நெஞ்சார வாழ்த்திமுத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் எமது . கீழை இளையவன் வலை தளம் சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.




சர்வதேச மகளிர் தினம் இன்று (08.032012) வியாழக் கிழமை  உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நம் கீழக்கரை நகரிலும், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக இன்று கருத்தரங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நம் கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார்கள்.





“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா... என்ற பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில், இன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி, மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னமும், பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் இப்போது எ‌ளிமையாக‌க் கொடாடி மகிழலாம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.




18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.

1911 ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, இது நூறாவது சர்வதேச மகளிர் தினமாகும் என்ற வகையில் இன்றைய தினம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நாடும் நிறுவனங்களும் பல்வேறு தொனிப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை இவ்வருடம் "கல்வி, பயிற்சி மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு, பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி" எனும் தொனிப்பொருளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறது.




கடந்த நூற்றாண்டில், 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஊதியத்தை அதிகரிக்கவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குமாறும் கோரி சுமார் 15000 பெண்கள் பேரணியொன்றை நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.

1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சி பெப்ரவரி 28 ஆம் திகதியை தேசிய மகளிர் தினமாக பிரகடனப்படுத்தி அமெரிக்கா முழுவதும் கொண்டாடியது. 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் நடந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டின்போது ஜேர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவியான கிளாரா ஸெட்கிட், மகளிர் தினத்தை சர்வதேச ரீதியாக கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதன்படி அடுத்த ஆண்டில் 1911 ஆம்  ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய முதல் தடவையாக நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1848 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலான நாடுகளில் புரட்சி அலை வீசியபோது பிரஷ்யாவின் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பகுதி) மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்த தினம் மார்ச் 19 ஆம் திகதியாகும் என்பதே அது பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது. (மேற்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது வேறு கதை)

நியாயமான ஊதியம், சிறந்த வேலைத் தள சூழல் ஆகியவற்றுக்காக பெண்கள் இத்தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதனிடையே 1911 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 146 பெண்கள் உயிரிழந்தை பெண் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்பான கவனத்தை அதிகரித்திருந்தது.

ஆனால், உலகெங்கும் ஒரே சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஏன் மார்ச் 8 ஆம் தேதி?

1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அக்காலத்தில் ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.




1917 ஆம் ஆண்டு ரஷ்யாவின் பெப்ரவரி புரட்சியின் போது மகளிர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக திரண்ட பெண்கள், ஸார் மன்னருக்கெதிராக போராட்டம் நடத்தி அப்புரட்சியிலும் பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது. 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் அவ்வருடம்  முதல் தடவையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஐ.நா. அனுசரணை வழங்க ஆரம்பித்தது.

தற்போது, ரஷ்யா, உக்ரேன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், பெலாரஸ், புர்கினா பெஸோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஸகஸ்தான், மோல்டோவா, மொங்கோலியா, மொன்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் உத்தியோகபூர்வ விடுமுறை தினமாகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சீனா, நேபாளம், மடகஸ்கார் ஆகிய நாடுகளில் இத்தினம் பெண்களுக்கு மாத்திரம்  விடுமுறை  வழங்கப்படுகிறது.

தொழிலாளர் படையைப் பொறுத்தவரை இலங்கையில் பாலின சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. இவ்விடயத்தில் அதிக இடைவெளி கொண்ட நாடுகளில் இலங்கை 20 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய மார்க்கத்தில் மகளிர் சுதந்திரம்


"இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லை", "இஸ்லாம் பெண்களை அடிமையாக நடத்துகிறது", "பர்தா பெண்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது"  என்பதெல்லாம் இவர்களின் போலிக் கருத்துப்பிரச்சாரங்கள். இவ்வாறான போலிப் பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் வளர்ச்சி தட்டுப்பட்டுவிடாது. இவர்களுக்கு வேண்டுமானால் உலக மகளிர் தினத்தில் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமைகள் பற்றியும், சுதந்திரம் பற்றியும் விவாதிக்க மார்ச்-8 தேவைப்படலாம். 


 

பெண்உரிமை பற்றியும், பெண் வாழ்க்கைத் திட்டம் பற்றியும், பெண்ணியத்தின் கண்ணியம் பற்றியும் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டுவிட்டது. ஆண் பெண் கலத்தல் இல்லாமல் பெண்கள் கல்வி கற்பதிலோ, பணிபுரிவதிலோ எந்தத் தவறுமில்லை. தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலும் கணிசமாக முன்னேறி வந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கான சூழல்களும் உருவாகிக்கொண்டுதான் வருகின்றன. இஸ்லாமிய சமுதாய அமைப்பு இத்தகைய முன்னேற்றங்களை தங்களின் கடமையான எண்ணி செய்யவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, இல்லற வாழ்க்கையில் பெண்கள், ஆண்களைவிடச் சற்று அதிகமான பொருப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக்கொள்வது பெண்கள். ஒவ்வொறு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள் தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.

சமஉரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண்எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்றில்லை அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம். இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை. 



முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவில் பின்தங்கியிருக்கிறார்கள், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் இதற்குக் காரணமாக "பர்தா முறை" பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மேற்கோளிடுகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு, அரசு வேலைவாய்ப்பு போன்றவைகளில் பின்தங்கியிருப்பது ஏற்கவேண்டிய ஒன்றுதான்.

இக்கருத்தில் கூறப்படுவதுபோல பெண்கள் மட்டும் அல்ல, முஸ்லிம் ஆண்களும் கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்புகளில் பின்தங்கியே இருக்கிறார்கள். காரணம் முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களால் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒடுக்கப்படுகிறது என்பதே உண்மை.

உதாரணமாக இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராடிவருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாறவேண்டுமானால் முஸ்லிம்களும் கல்வி நிலையில் உயரவேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும். அரசு வேலைவாய்ப்புகள் முதல் அரசியல் வரை முஸ்லிம்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆண், பெண் கலத்தல் மூலம் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கான வழிகளை இஸ்லாம் அடைக்கிறதே தவிர, பெண்களின் முன்னேற்றத்தையோ, சுதந்திரத்தையோ அல்ல.

Monday, 13 February 2012

சொல்கிறார்கள் 2012 இல் உலகம் அழியுமாம்...??? மாயன் கலண்டரை பொய்ப்பிக்கும் முஸ்லிம் மாயன்கள்...!!!

 கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் சுவையான தகவல் 

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின. 



 

யார் இவர்கள்?


மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது. இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம்.

  
மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர். ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது. இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம்.

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது. 1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.

மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில...


  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். 
  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது. 
  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர். 
  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது. 
தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும். உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள்.

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது.

மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார். இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார். ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். 
...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia. 
பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia 


இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம். தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது. அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.
 
 
மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.    
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay" 

இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by: 
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. link
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. link
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. link
4. Islam in Mexico - wikipedia. link
5. Maya Indians - howstuffworks. link
6. El Islam en México - M Semanal. 15th May 2011. link
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. link
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. link
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. link
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. link
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. link
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.

நன்றி ஜமால் அவர்களே !

Sunday, 12 February 2012

பிரியாணி வடா

துபாயிலிருந்து முஹம்மது நஜீம் மரைக்கா அவர்கள் தரும் சுவையான சமையல் குறிப்பு


உங்கள் வீட்டில் பிரியாணி மிஞ்சி விட்டதா (எந்த பிரியாணியா இருந்தாலும் சிக்கன், மட்டன் அல்லது வெஜி) அதனை அடுத்தா நாள் மிக்சியில் போட்டு மாவு போல் ஆட்டி அதனுடன் அரிசி மாவு மற்றும் கீழே குறிபிட்ட பொருள்களை கலந்து, கையில் ஒட்டாமல் இருக்க முட்டையை தடவி கொண்டு பொறித்து எடுத்து அதனுடன் புதினா சட்னி அல்லது தக்காளி சட்னி தொட்டு மாலை நேரத்தில் சாப்பிட்டு பாருங்களேன் மிகவும் ருசியாக இருக்கும்.




தேவையான பொருட்கள்:


1. அரிசி மாவு (கட்டியாகும் அளவுக்கு)
2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
4. பொடியாக நறுக்கிய கருவா இழை
5. பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு
6. பொடியாக நறுக்கிய பூண்டு துண்டு
7. சீரகத்தூள் (2 டீக் கரண்டி ஒர் சிறிதளவு)
8. ம்ஞ்சள் தூள்
9. உப்பு தேவையான அளவு.


                                     நன்றி  முஹம்மது நஜீம் மரைக்கா அவர்களே !

Tuesday, 7 February 2012

"குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால்..?" - கட்டுரையாளர் அஹமது அஸ்பாக் துபாயிலிருந்து...

முன்னுரை

மலேரியா கொசுக்களின் பிறப்பிடமாக, தென் ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கு அடுத்தபடியாக இராமேஸ்வரம் முதல் கீழக்கரை வழியாக வாலிநோக்கம்  கடற்கரை  வரையிலுள்ள பகுதிகள் தான் என்று புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.  அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள் என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.

நம் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமான கீழக்கரையிலும்,  நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் நம் நகராட்சியாலும, சமூக ஆர்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.




குப்பைகள் இல்லா நல்லுலகு !

குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால், குப்பைகள் காணாமல் போய்விடும் என்று எண்ணுகின்றார்கள். ஆம்... குப்பைகள்  நம் கண்களில் இருந்து மறைவது உண்மைதான். ஆனால், அது நமது காற்று மண்டலத்தில் கலந்து, புற்று நோய் உண்டாக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நமது இஸ்லாமிய மார்க்கம், "சுத்தத்தின் உறைவிடம், அசுத்தத்தின் எதிரி", என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால் நமது கீழக்கரையை காணும் பொழுது, அது உண்மை தானா ? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

அன்புச் சகோதர்களே, கிழக்கரை சுத்தத்திற்கும், இஸ்லாமிய மர்க்த்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா ?  நமது ஊர் ஜனத்தொகையில் 65 விழுக்காடுக்கு மேல் முஸ்லிம்கள் தான் உள்ளனர் என்று புள்ளி அறிக்கைகள் தெரிவிகின்றன. அப்படி இருக்க, நமது ஊர் கீழக்கரை ஓர் குப்பைக்ரையாக மாறியதன் காரணம் என்ன என்பதை சற்று அலசிப் பார்போம்.

சிறு துளி.. பெரு வெள்ளம்...


“சிறு துளி, பேரு வெள்ளம்” என்பது போல, சிறிது சிறிதாக கூடிய குப்பைகள் இன்று டன் கணக்கில் குவியக் கூடிய, ஓர் குப்பை மலையாகவே காட்சி அளிக்கின்றது. எழில்மிகு கடற்கரையை, கடலும் கடல் சார்ந்த தொழில்களை பிரதான மையமாக கொண்ட நமது ஊரில், இப்படி ஓர் அவலம் ஏற்படக் காரணம். நாம்.....ஆம் நாம் மட்டுமே.....

குப்பைகள் கொட்ட ஏக்கர் கணக்கில் நிலம்


இன்று நமது அரசியல் தலைவர்களை கேட்டால், குப்பை கொட்ட இடம் இல்லையாம். அல்லது ஒரு நல்ல இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் தான், ஊர் குப்பையாக இருக்கின்றதாம். இதைகேட்கும் போதெல்லாம், எனக்கு ஓர் கேலிப் பேச்சு தான் நினைவிற்கு  வருகின்றது “ ஒருவன் உமில்நீரை  துப்ப இடம் இல்லாததால், அவன் சட்டை பைக்குள் துப்பிக் கொண்டானாம்” அப்படி இருக்கின்றது இவர்களின் வார்த்தைகள்.



கடற்கரை ஓரமாக சாலை அமைத்த நல்லவர்கள். அங்கு சேரும் குப்பைகளை அகற்ற ஆவணம் செய்திருக்கலாமே!!! உடுத்துவதற்கு உடை வேண்டுமா, படுப்பதற்கு பாய் வேண்டுமா என்றால், உடை இல்லாதவன் உடையை தானே கேட்பான். நமது உடை சுகாதாரம். அதனை தேடுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். தற்போதைய நம் கீழக்கரை நகராட்சியாலும், சமூக ஆர்வலர்களின் முயற்ற்சியாலும் எடுக்கப்பட்டிருக்கும் பல முயற்சிகள் கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


பெயர் தெரியாத பல நோய்களை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் நம் கீழை நகரத்தின் நோய்கள் அனைத்தும் உருவாவது குப்பையில் தான் என்பது இன்று பலருக்கும் புரியாமலே இருக்கிறது. ஆனால் நாம் வாழ்வதே அந்த குப்பையில் என்றால் கேட்பதற்கே கவலையாக இருக்குகின்றது. நான் இம்முறை நமது ஊர் வந்த பொழுது, மிகவும் சரளமாக என் காதில் விழுந்த வார்த்தைகள் “உம்மாடி, என்னம்மா இது? எந்த டாக்டர்...ட போனாலும் கூட்டமா இருக்குதுமா” ஏன் இந்த அவலம் என்று ஆராய்ந்தால், சுகாதார இன்மை தான் அதற்க்கு பதிலாக வருகிறது. அதற்கு காரணம் நமது ஊரில் பெருகி கிடக்கும் குப்பைகளும், கூளங்களும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல் ஊர் நமதல்ல. என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

சிந்திக்கும் தருணமிது!


பண்டைய காலம் முதல் நம் கீழக்கரை நகரம் ஓர் அமைதிப் பூங்காவாக, எழில் கொஞ்சும் ஓர் இடமாகவே  விளங்கி இருக்குகின்றது. நமது ஊரை சுற்றி உள்ள சிறிய ஊர்களை, கிராமங்கள் என்று அழைக்கப்பட்டாலும், நமது ஊரை சிறு நகரமாகவே நாம் பாவித்து வருகின்றோம். நமது ஊர் ஒருமைப்பாட்டை மெச்சாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட ஓர் ஊர் இப்படி குப்பை காடாக மாறியதன் காரணம் என்ன ?
கீழக்கரையில் கடுமையாக்கப் படவேண்டிய பாலிதீன் தடை

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார்.  பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.



பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. தற்போது நம் கீழக்கரையில் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் பாலிதீன் ஒழிப்பும் சிறிது நாள்களில் காணாமல் பொய் விடக் கூடாது.  இதற்க்கான மன மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.
என்ன செய்யலாம் ?

கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம். மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம். மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.



இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம். குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

முடிவுரை - முயற்சிகள் முடிவதில்லை ...

நம் கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது லாபிர் அவர்கள் தனி மனிதனாக இந்த சிகர சாதனையை அடைய முடியாது. அவர்கள் இந்த சுத்தத்தின் சிகரத்தை அடைய நினைப்பது.. அவருக்காக மட்டுமா? சற்று சிந்திக்க வேண்டும். இவர்கள் மட்டுமல்ல, எவர்கள் இது குறித்து முயற்சிகள் எடுத்தாலும் நம் அனைவர்களுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல், வெறுமெனே ஆயிரம் கருத்தரங்குகள் நடத்தினாலும் பயனில்லை.  கீழை இளையவன் முயற்சிகள் எடுக்கலாம், எக்ஸ்னோர வழிகளை சொல்லலாம். ஆனால் உங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒன்றும் மாறப்போவது இல்லை.

இது தொடர்ந்தால், பிழைப்பு தேடிச்செல்லும் நாடோடிகள் போல, நாமும் ஒருநாள் சுத்தம் தேடிச் செல்லும் ஓர் சமுதாயமாக மாறக்கூடும். இறைவன் காப்பானாக.......

நன்றி  அஹமது அஸ்பாக் அவர்களே !