Wednesday, 16 May 2012

இன்றைய சூழலில் இளைஞர்கள் மீது சமூக வலைதளங்களின் தாக்கம் - கட்டுரையாளர் கீழை இளையவன்

முன்னுரை

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்', என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கினங்க, உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஒரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இந்த சமூக வலைத் தளங்கள் ஏதுவாகிறது. அண்டை வீட்டு அளவிலும், தெரு நட்புகள் அளவிலும், பள்ளிகள் அளவிலும், கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள் அளவிலும் மட்டுமே இருந்து வந்த நம் நட்பு வட்டாரங்கள், இன்று இந்த சமூக வலைத் தளங்களின் வாயிலாக பறந்து, விரிந்து உலகம் முழுவதும் தன நட்பின் பாச வலைகளை வீசியிருக்கிறது.
"நான் வசிக்கும், இடத்திற்கே வந்து எனக்கு அறிவுரை கூற, கருத்துக்கள் சொல்ல, விமர்சனங்கள் செய்ய, வாழ்த்துக்கள் பரிமாற,  எனக்கு ஆலோசனைகள் சொல்ல... உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிக் கொள்ளும் எழுச்சி மிகு இளைய சமுதாயத்தை தாங்கி, இன்றைய உலகம் புதிதாய் உருவெடுத்துள்ளது. இருந்த போதிலும், இந்த சமூக வலைத் தளங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் 'மதில் மேல் பூனையாக' பல எழுச்சிகளையும், பல வீழ்ச்சிகளையும், தாக்கங்களையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறது.

இளைய சமுதாயத்தின் எழுச்சி மிகு பயணம்பேஸ் புக், டிவிட்டர், ஆர்குட், மை ஸ்பேஸ் மற்றும் கூகுளின் அக்கப் பக்கங்கள் போன்ற முன்னோடி சமூக வலைத் தளங்களின் மூலமாக, இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கு, அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கிறது. இந்த தளங்களின் மூலம் இளைஞர்களின் உள்ளார்ந்த திறமைகள் வெளிக்கொணரப் படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தங்கள் உலகளாவிய நட்பு வட்டாரங்களால் இடப்படும் குறியீடுகள், மற்றும் விமர்சனங்கள் போன்ற ஊக்க மருந்துகளால், இன்றைய இளைய தலை முறையினரின் பலரை பிரபலமானவர்களின் பட்டியலில் இடம் பெற செய்கிறது.
பல தவறான முன்னுதாரனங்களையும்  தாண்டி, 'இன்று ஒரு தகவல்', 'தெரிந்து கொள்வோம்' போன்ற சமூக வலை தள பக்கங்கள் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.  மிகக் குறைந்த பொருட் செலவில், தன்னுடைய மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தை, இந்த சமூக வலை தளங்களில் மேலேற்றம் செய்வது வெளியிடுவதன் மூலம், இந்த பரந்த, போட்டி நிறைந்த உலகில் 'நானும் இளவரசன்' என்ற குதூகலிப்பில் இளைஞர்கள் பட்டாளத்தை தன் பக்கம் படையெடுக்க வைத்திருக்கிறது.

இளைய தலைமுறையின் மறுமலர்ச்சி வாசனைகள்

இன்றைய இளைஞர்களால், உலகத்தின் அசைவுகளை, விரல் நுனியில் அசை போட, சமூக வலைதளங்களின் வீரியமிக்க பயன்பாடு பெரிதும் உதவி புரிகிறது. அரசாங்க போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவ சமுதாயத்திற்கு, மிகப் பெரிய அறிவுக் களஞ்சியமாக, ஆசானாக, இந்த சமூக வலை தளங்கள் செயல்படுகிறது. சமீபத்திய முக்கிய நிகழ்வுகள், பொது அறிவு, கணித தீர்வுகள் என இளைய சமுதாயத்தினரால் சிறப்பாக அலசப்படுகிறது. இன்னும் இளைஞர்களின் அறிவுப் புயல் மூலம் தீர்க்க இயலாத பெரிய பிரச்சனைகள் கூட, இந்த சமூக வலை தளங்களில், சிறப்பான முறையில் விமர்சிக்கப்பட்டு, பெரும் புரட்சிகளை உண்டு பண்ணி இருக்கிறது.
சமீபத்தில் இளைஞர் சமுதாயத்தால் நடந்தேறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உலகளவிலான அமெரிக்க இளைஞர்களின் 'வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம்' , இந்திய அளவிலான கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தமிழக அளவிலான கூடன் குளம், முல்லைப் பெரியாறு அணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த சமூக வலை தளங்கள் மூலம் கருத்துக்களால், விமர்சனங்களால் அலசப்பட்டு, அதன் நிரந்தர தீர்வுகள் புது வடிவம் பெற்று வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

பாலய நண்பர்களின் பாசறை

"பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் 'இனி எந்த ஊரில்... எந்த நாட்டில் எங்கு காண்போமோ ?' என்ற உருக்கமான சொற்றொடர்கள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். கடைசியாக பள்ளியிலோ, கல்லூரியின் பிரிவுபசார விழாவிலோ சந்தித்து விடை பெற்ற அன்பு நண்பர்களின் முகத்தை மட்டும் மனதில் நிறுத்தி, முகவரிகளை தொலைத்த நாம், அத்தனை நண்பர்களையும், மொத்தமாக, பூட்டிய அறைக்குள் இருந்து கொண்டே, உலகம் முழுதும் வலம் வந்து, தேடி கண்டுபிடித்து விட்ட களிப்பின் தாக்கம் அத்தனையும் முதுமையை எட்டிப் பிடிக்க காத்திருக்கும் இளைஞர்களின் முகத்தில் கூட பிரகாசமாக தோன்றுகிறது.
காலத்தை வீணடிக்கும் கணினியுகப் போர்


'காலம் பொன் போன்றது' என்று சொல்லுவார்கள். அவ்வாறு விலை மதிக்க முடியாத பொன்னான நேரங்களை சமூக வலை தளங்களில் கணக்கின்றி செலவழிக்கும் நம் இளைய சமுதாயம் மைதான விளையாட்டுக்களையும், இயற்கையை ரசிக்கும் தன்மையையும் அடியோடு மறந்தே விட்டது.
எட்டு வயதுக்கும் குறைவான நம் எதிர் கால தூண்கள் கூட, தினமும் ஆறு மணி நேரங்கள் இந்த சமூக வலை தளங்களில் வீழ்ந்து கிடப்பது அவர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெகுவாக குறைத்து வருகிறது. சமூக வலை தளங்களின் தாக்கத்தால் மனதளவில் அடிமைகளாக சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் மனநிலை மற்றும் உடல் கூறுகளின் பாதிப்புகள் அதிகமாவதாக மனோதத்துவ நிபுணர்களும், நரம்பியல் வல்லுனர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அதிக நேரம் இவ்வலை தளங்களில் நேரம் செலவழிப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"


என்ற பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, கணினியிலேயே இளமையை தொலைத்து விடாமல், அளவோடு பயன்படுத்தி, கணினியுகப் போரை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும்.

பொய்யான அறிமுகங்களும், இளைஞர்களின் இரகசிய சமுதாய வட்டமும் :

சமூக வலை தளங்களில் வலம் வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வலை தள கணக்குகளை வெவ்வேறு பெயர்களில் திறந்து, உண்மைக்கு புறம்பான சுய விளம்பரங்கள் செய்து பிறரை ஏமாற்றுவதுடன், அதன் சிறப்பான நோக்கத்தை சீரழித்தும் வருகின்றனர். இதனால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட விஷமிகளின்  தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.சமீப காலங்களில் 'சைபர் கிரிமினல்' குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, நம் தென் தமிழகத்தில் பேஸ் புக் என்ற சமூக வலை தளத்தின் மூலம் தவறான சுய அறிமுகம் செய்து கொண்ட ஒரு பெண், பல இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இந்த சமூக வலை தளங்களின் மூலம் இளைஞர்கள் அறிந்தோ, அறியாமலோ ஒரு இரகசிய சமுதாய வட்டத்தினை உருவாக்கி அதனுள் சர்வ சுதந்திரமாக வலம் வருகின்றனர். இதன் தாக்கத்தால் பெற்றோர்கள் கூட, சமூக வலை தளங்களை பயன்படுத்தும் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது என்பது மிகக் கடினமானதாகவே இருந்து வருகிறது.

தீவிரவாதம் மற்றும் ஆபாசங்களின் அணைக்கட்டு
சமீப காலங்களில் இந்த சமூக வலை தளங்கள், தீவிரவாத விசக் கிருமிகள் செழித்து வளர மிகச் சரியான தளமாக இருந்து வருவது மிகுந்த வருத்ததிற்குரியது. தங்களுடைய அபாயத் திட்டங்களை , ஓரிடத்தில் இருந்து கொண்டே உலகமயமாக்கும் தீவிரவாத சக்திகளின் தொலை தொடர்பு சாதனமாகவும் திகழ்கிறது. இந்த சமூக வலை தளங்கள் மூலம், 'மூளைச் சலவை' செய்யப்படும் தீவிரவாதிகள் உலகத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றனர்.
வலை தளங்கள் உருவான காலத்திலிருந்து இலவச ஆபாச காட்சிகளும், அலையா விருந்தாளியாக கூடவே பரவலாக்கப்பட்டிருக்கிறது எனபது நாம் யாவரும் அறிந்த கூடுதல் தகவல். தற்போது இந்த சமூக வலை தளங்களில் வலம் வரும் சில சமூக விரோத காமுகர்கள், இளைஞர்களின் பாலுணர்ச்சியை தூண்டும் புகைப் படங்களை, ஒலி ஒளி காட்சிகளை பகிர்வு செய்து வருகின்றனர்.

இது போன்ற ஆபாசங்கள் மற்றும் தீவிரவாதங்களின் அணைக்கட்டாக இந்த சமூக வலை தளங்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

முடிவுரை

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பேஸ் புக் என்கிற சமூக வலை தளம் தற்போது 800 மில்லியன் பயனாளர்களை  கொண்டு இயங்கி வருகிறது. இதன் நிறுவனர். MARK ZUCKERBERG அவர்கள் பேஸ் பக் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையில் "இந்த சமூக வலை தளத்தின் மூலம் இளைய சமுதாயத்தின் மறுமலர்ச்சியை, எழுச்சியை விரைவில் உலகமெங்கும் காண முடியும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால் இது போன்ற சமூக வலை தளங்களின் வீரிய வேர்கள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தன பாதையை அமைத்துக் கொள்ளும் என்று, அன்றைய தினம் யாரும் அறிந்திருக்கவில்லை.'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. ஆகவே நம் இளைய சமுதாயம் அறிவார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் அதற்கு கூட அடிமையாவது என்பது ஆபத்தானது. இந்த சமூக வலை தளங்களை இளைஞர்கள் மிகச் சரியான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிரதி பலனான ஆக்கமும், அழிவும் அவர்கள் கைகளிலேயே இருக்கிறது.
'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்'


என்ற வள்ளுவரின் சொல்லுக்கினங்க முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்து, இந்த சமூக வலை தளங்களை, இளைஞர்களுடைய ஆக்கங்களின் தாக்கமாக உருவாக்க வேண்டும். இல்லையெனில் நெருப்பின் முன் வைத்த வைக்கோல் கருகி விடுவதை போல அழிவின் தாக்கமாக இளைஞர்கள் மத்தியில் இந்த சமூக வலை தளங்கள் உருவெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

2 comments: