Wednesday, 2 May 2012

பூரண மது ஒழிப்பு சாத்தியமே ! கட்டுரையாளர் - எம்.பஹ்ஜத் குபுரா, கீழக்கரை

 (காயல்பட்டினத்தில் 29.04.2012 அன்று, ஐக்கிய சமாதானப் பேரவை நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை )

எம்.பஹ்ஜத் குபுரா அவர்கள் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வணிக மேம்பாட்டுவியல் (B.B.A.,) இரண்டாமாண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னுரை :

அவன் குடித்தான்.. தள்ளாடியது... அவன் குடும்பம் ! என்று சொல்லுவார்கள். ஒரு மனிதனை இந்த குடிப்பழக்கம் அவல பாதாளத்தில் தள்ளி, எட்ட நின்று எள்ளி நகையாடும், மகா கொடிய மிருகம் என்றால் அது மிகையாகாது. புஜங்கள் திமிரும் பலம் பொருந்திய,அறிவு பொதிந்த, ஆட்சி அதிகாரங்கள் கொண்ட அரசனாக இருந்தாலும், இந்த குடியில் வீழ்ந்தால்.. எழுவது வீதியில் தான் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இறைவனின் முதல் கட்டளை செய் என்பதல்ல. செய்யாதே.. என்பதுதான். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான்.  இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது எனபது தான். இந்த சோதனைக் களத்தில் வெற்றி பெறுபருக்குத் தான் ஈருலக வாழ்க்கையும் வளம் பெறும்.இன்றும் ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட அல்-கோஹல் (al-kuhul) என்ற சொல்லின் மூலத்திலிருந்து தான் வந்ததாகவும், அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அராபிய பாலைவனத்தில் 'ஜாஹிலியா' என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த மகா பாதக கொடுமைகளை அரங்கேற்றிய  காட்டரபிகள்  விபச்சாரம்,கொலை, கொள்ளை மட்டுமல்லாமல்,  குடம் குடமாக மது அருந்திய ஒரு சமுதாயம், தங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு மதுக் குடங்களை தெருவில் போட்டு உடைத்து, திருந்திந்திய வரலாற்றுப் பதிவுகள், இந்த பூவுலகை இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆகவே இந்த அறிவை மழுக்கும் மதுவை இன்றைய சமுதாயம் முழுமையாக விலக்குவது சாத்தியமா ? என்பதை சமூகத்தின் பார்வையிலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் மூலமும் ஆராய்ந்து பார்ப்போம்.

பாவத்தின் தலைவாசல் மது :


இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் முஸ்லீம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அது அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் திருமதீனா வந்த பின்னர் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள் :- 'அல்லாஹ்வின் தூதரே ! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்குவீர்களாக. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்று கூறினார்கள்' அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கி வைத்தான்.
"மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம் அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)"

மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடை விதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்று கருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.ஆனால் அனைத்து பாவங்களுக்கும் தலையாயதாக, பாவங்கள் செய்ய தூண்டுகோலாக, தலைவாசலாக இந்த மதுப் பழக்கம் இருப்பதினை உணர்ந்த அரபியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து  முழுவதுமாக விடுபட இறைவன் விரைவிலேயே நல் வழி காட்டினான்.

அரேபியாவும், ஆல்கஹாலும் :

மதுவருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது அவர்கள் அருந்தி வந்தனர். முதல் தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது. இறுதியில் மது தீங்கு விளைவிப்பதே என அவர்கள் உணர்ந்ததும் பூரணமாக தடை விதிக்கப்பட்டது. அச்சமயம் அதை அமுல் அமுல்படுத்துவதற்கும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்ற சட்டம் வந்தது ஏன்? என்பதை பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது. ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவு பரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால் விருந்தினர் அதையும் அருந்தினர். மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால் யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்க சென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் “காபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிய அவர் காபிர்களே ! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான் வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன் என்று மாற்றி ஓதிவிட்டார். இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள் போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது.

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது. இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டு மது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதை தெளிந்திருக்கும். பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பிறகு மது அருந்துவார்கள். மதியம் லுஹர் தொழுகையின் போது அது தெளிந்துவிடும்.  இந்நிலை சில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை .

பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலை பொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டு அதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும் பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன் மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார்.

இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்து காயப்படுத்திவிட்டார். ஸஃது அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் இறைவா ! மது விஷயத்தில் தெளிவான கட்டளையை  தெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர்தான் அறவே மது அருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்ற அத்தியாயத்தில் வருகிறது. (ஆதாரம்: புஹாரி,முஸ்லீம்)

மது அருந்துவோருக்கு எச்சரிக்கை :


மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவை அருந்துதல் கொடிய குற்றமாகும். கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது கெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மை விசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றை அப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : உதுமான் (ரலி) அவ்ர்கள். நூல்: நஸாஈ)மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்றவாளிகளே !. நாயகம் (ஸல்) அவர்கள் மது சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள். 1) மதுவை காய்ச்சுபவர், 2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர், 3)அதை குடிப்பவர் , 4) அதனை புகட்டுபவர், 5) அதனை சுமந்து செல்பவர், 6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், 7) அதனை விற்பனை செய்பவர், 8) அதை வாங்குபவர், 9) அதனை வெகுமதியாக கொடுப்பவர், 10 )அதனை விற்றுப் புசிப்பவர் ஆகியோர். (அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் (ரலி) நூல்: திர்மிதி)

எவருடைய வயிற்றில் மதுபானம் போய் நுழைந்ததோ, அவரின் ஏழு நாட்களின் தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மதுபானம் அருந்தியதால் எவருடைய அறிவு போதையாகிவிட்டதோ அவரின் நாட்பது நாட்களின் நன்மைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்த நாற்பது நாட்கள் கழியுமுன் அவன் மரணமாகிவிட்டால் காபிராகவே (இறை நிராகரிப்பாளனாகவே)  மரணிப்பான். ஆனால் பாவமன்னிப்பு கேட்டு மீண்டும் மது குடிப்பானேயானால் அவனுக்கு நரகில் 'தின்யத்துல் கபால்' என்னும் நீர் புகட்டப்படும். அப்போது சஹாபாக்கள்  யா ரசூலுல்லாஹ் ! தின்யத்துல் கபால் என்றால் என்ன ? என்று கேட்டார்கள். தின்யத்துல் கபால் என்பது நரகவாதிகளுடைய சீலும், சலமும், இரத்தமும் கலந்த கொதி தண்ணீர் என கூறினார்கள்.

மேதையாக இருந்தாலும் போதையில் மிருகமே :


குடித்தவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், எத்தகய ஈமான் கொண்ட சீமானாக இருந்தாலும், அவன் அல்லாஹ்வின் அன்புக்குறியவனாக ஆக முடியாது. அவன் இறக்கும் வரை ஈமானை இழக்காமல் இதயத்திலேயே வருத்தியிருந்தாலும் கூட எத்தகய சிறப்பும் பெற்றுவிட முடியாது. மதுமேல் அவன் கொண்ட மோகம் அவனின் ஈமானின் பாகத்தை பறித்துவிடும். மதுபானம் குடித்து மகிழ்ந்திருப்பவன், அதில் மயங்கியிருப்பவன் மாண்புடைய ஈமானையும் கொண்டிருப்பானாயின் அந்த ஈமான் அவனிடமிருந்து பறிக்கப்பட்டே தீரும். ஆகவே அவன் இறப்பதற்கு முன்னேயே அவனிடமுள்ள ஈமான் இறந்து விடும். இதற்கோர் எடுத்துக்காட்டு :-ஷைக் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள், ஒரு சமயம் நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் பெண்கள் கூட்டமாக அழுதுகொண்டிருந்தார்கள்.இதைக்கண்ட நான் அவர்களிடம் சென்று ஏன் அழுதுகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அண்டை வீட்டில் ஒருவர் சக்ராத் நிலையில் கிடக்கிறார். அவர் வாயில் ஷஹாதத் கலிமா சொல்ல வரவில்லை. நாங்கள் பலமுறை சொல்லிக்கொடுத்தோம். அப்படியும் அவரால் அதை சொல்ல முடியவில்லை. ஆகவே நீங்கள் அதை சொல்லிக்கொடுத்தால் ஒரு வேலை அவர் சொன்னாலும் சொல்லக்கூடும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.நானும் சென்று அம் மனிதனுக்கு எத்தனையோ முறை கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுத்தேன். அப்போதும் அவர் சொல்லவேயில்லை. இறுதியாக திடீர் என்று கண் விழித்தார். நான் சொன்ன கலிமாவை மட்டும் காதால் கேட்டார். கேட்ட உடனேயே நான் இஸ்லாத்தை வெறுக்கிறேன் என உரத்துச் சப்தமிட்டார். அந்த சப்தத்துடன் அவரது ஆவி பிரிந்தது.

உடனே நான் அப்பெண்களிடத்தில் இவர் காபிராக மரணித்துவிட்டார். ஆகவே இவருக்கு ஜனாசா தொழ வைப்பதோ முஸ்லீம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் ச்ர்ய்வதோ கூடாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். பின் அந்த இறந்தவரின் உறவினர்களை அழைத்து இவர் தன் ஜீவியத்தில் என்ன செயல்களை செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன். இதற்கவர்கள் இவர் தனது ஜீவியத்தில் ஒழுங்காக தொழுது இறைவனுக்கு பிரியமான பல காரியங்களும் செய்து வந்தார். ஆனால் மது அருந்துவதை மட்டும் தன் பழக்கமாக கொண்டிருந்தார் என கூறினார்கள். நான் உடனே இவர் மது அருந்துவதை பழக்கமாக கொண்டதால் இவரின் ஈமான் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். இவ்வாறு அப்துல் அஜீஸ் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

மதுவால் வரும் கேடு :

மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்." 
  என்று திருவள்ளுவர் கல் உண்ணும் மாந்தர்களை இழிந்துரைக்கிறார்.

மதுபானமானது பாவங்களை சேகரிக்கும் மிகப்பெரும் கருவியாகும். மதுபானம் அருந்துபவர் சிலைகளை வணங்குபவர் போல் ஆவார். மதுபானம் அருந்துபவரை இறைவன் சபிக்கிறான். மேலும் அவன் மீது இறைவனின் சாபமும் ஏற்படுகிறது. மது பானம் அருந்துபவரின் ஈமான் பரிக்கப்பட்டுவிடும். ஏனெனில் மதுபானமும் ஈமானும் ஒன்று சேராது. எவராகிலும் மதுபானம் அருந்தினவருக்கு ஸலாம் சொன்னாலும் அவனை அனைத்துப்பிடித்தாலும் அவரின் 40 நாடளின் நன்மைகள் அழிக்கப்படும்.

மது அருந்துபவரின் நிலை இப்படியென்றால் மதுக்கடைகளை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்கிறார்களே அவர்களின் நிலை என்னவாகும்? அகிலத்தை படைத்து ஆட்சி செய்யும் ஏக அல்லாஹ்வின் ஆணை பெரிதல்லவா? சில முஸ்லீம்கள் ஐங்காலமும் தொழுது வருகிறார்கள். ஆயினும் மது வியாபாரத்தொழிலை செய்து வருகிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் நாங்களென்ன குடிக்கவா செய்கிறோம். வியாபாரம்தானே செய்கிறோம் என்று கூருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற மது பாட்டில்கள் எத்தனை குடும்பங்களை குட்டிச்சுவராக்கியுள்ளன. எத்தனை மானங்கெட்ட ஈன பிறவிகளை எல்லாம் உருவாக்கியுள்ளன ? மதுபானம் குடிப்பவன்,விற்பவன்,அதற்கு உதவி செய்பவன் அனைவருக்கும் ஒரே தண்டனைதான் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை அவர்கள் எண்ணிப்பர்க்க வேண்டும்.

மதியை போக்கும் மதுவே  போ........ போ..............


மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள். அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம். அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம். என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான். அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும் " என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்ற  இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மது அருந்துவது மா பாதகச்செயல். அது மதியை மங்க வைத்துவிடும். புனிதமிகு மனிதனை கொடிய மிருகமாக்கி விடும் என்பதை மதியுடையோர் அனைவரும் நன்குணர்வர். மது அருந்துவதை சர்வ சாதாரண செயலாகக்கொண்டு நாள்தோரும் பல முறை குடித்து குடித்து கும்மாளமிட்ட அரேபியர்களிடையே மதுவின் தீமைகளை படிப்படியாக துணிந்துரைத்து, இறுதியில் மதுவிலக்கை அமுல் நடத்தி வெற்றி கண்ட பெருமை வேந்தர் நபி (ஸல்) அவர்களேயே சாரும்.

யார் அல்லாஹ்வையும் ம்றுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் மதுக்குவலையின் அருகில் கூட அமர வேண்டாம் என அருமை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களது அறிவுரையை கேட்ட அரேபிய முஸ்லீம்கள் தங்கள் இல்லங்களிலிருந்த மதுக்குவலையை உடைத்து நொருக்கிய போது மதீனாவின் வீதிகளில் அம்மதுவானது ஆறென பெருக்கெடுத்து ஓடியது. மது அருந்துபவன் இஸ்லாத்தின் துரோகி மட்டுமல்லாமல் நாட்டின் துரோகியுமாவான். மது அருந்துவதனால் பல வகையான இழி தன்மைகள் ஏற்படுகின்றன. எனவே அதை விட்டு நீங்கி கொள்ளுமாறு உம்மை எச்சரிக்கிறேன் என அறிஞர் பகீஹ் அபூலைத் (ரஹ்) என்பார் அறிவிக்கிறார்.

தீயோரின் வேதனை அனைவருக்கும் :
  
நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள். என் சமுதாயம் கீழ் காணும் பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரி எனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும். அதில் மது அருந்துவதும் இடம் பெறுகிறது. (நூல் : மிஷ்காத்).  ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அனைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும். யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்ன என்று இருந்தால் வேதனை சுடும்.சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளை என்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. மற்றவர்கள் குடித்தால் நமக்கென்ன? நாம் மட்டும் குடிக்காமல் இருந்தால் போதும் என்று இருந்து விட்டால் அவர்களை பிடிக்கும் வேதனை நம்மையும் செர்த்து பிடித்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் செய்து குடியை தடுத்து நிறுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அச்செய்கையை விட்டும் காப்பற்றுவானாக.. ஆமீன்.

மதுவின் போதையால் கொலையும், தற்கொலையும் :

கொலை, தற்கொலை ஆகிய குற்றங்களை புரிவோரில் அதிகமானோர் மது அருந்தியவர்களேயாவர்.வீடுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கும் மதுக்கடைகளில் ஏற்படும் கலகங்களுக்கும் மதுவே காரணமாகும், மது அல்லது போதை மருந்துகளின் மயக்கத்திலேயே பல தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் ஏற்படும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது அருந்தும் போது ஏற்படும் குற்றங்களேயாகும்.மதிகெட்டு மிருக நிலைக்கு ஆளாகும் குடிகாரன் ஞாபகமிழந்து, உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, எண்ணும் திறனிழந்து பயனற்ற ஜடமாகி விடுகிறான். மூர்க்க தனமும், வெறிக்கூச்சலும் அவன் குடி போதையில் செய்யும் வேடிக்கைச்செயல்களும் நல்லொழுக்கத்திற்கு நேர்மாறாகி விடுகிறது. இனி எப்போதும் மதுவை தொடுவதில்லை என ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் சத்தியம் செய்யும் வார்த்தைகள் போல, மனோ நிலையும் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கோபமும் அதைத்தொடர்ந்து அழுகையும் உடனே வெடிச்சிரிப்பும் சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்துவான். அவனுக்காகவோ அல்லது குடி வெறியால் மற்றவர்களுக்கு விளையும் தொல்லைகளுக்காகவோ சிறிதும் கவலைப்படுவதில்லை. இதுவே இவர்களின் இழிநிலையாகும். இத்தகய மக்களால் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் என்ன பயன் ஏற்பட்டுவிடும் ?மனிதனின் கௌரவத்தை குலைத்து அவனை நேர்மையற்றவனாக, வெட்க உணர்வு சிறிதுமற்றவனாக மது மாற்றுவதை நாம் காண்கிறோம். மது போதையில் எண்ணிப்பார்க்க முடியாத பல பயங்கர குற்றங்களை மனிதன் எல்லா நிலைகளிலும் எல்லாக்காரியங்களிலும் புரிகிறான். அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும் ஏன் சமுதாயமும் கூட வேதனைப்படுகிறது என்ற போதிலும் மகிழ்விக்கும் மது கோப்பையை மனிதன் கைவிட விரும்பவில்லை. இதை எதிர்த்து அனைத்து துறையினரும் முயல வேண்டும். எளிதில் திருத்த முடியாத உலகப்பிரச்சனையாக என்றும் போல இன்றும் இருந்து வருவது யாவரும் மறுக்க முடியாத உண்மை.

அறிவை அடகு வைத்த அகம் - மது வெறி !

அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு, பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான். தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.

சாராயம் தரும் அரசியல் போதை :

தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசு முழுமையாகத் தன் வசம் வைத்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதாகவும் கூறுகிறது. மது விற்பனையால் ஏழை மக்களுக்குக் கேடுதான் அதிகமே ஒழிய அந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்குச் செய்யப்படும் நன்மை மிக மிகக் குறைவே என்பது நிதர்சனம். குடிப்பதனால் குடும்பத்திற்கு வருமான இழப்பு மட்டுமின்றி பசி, பட்டினியால் குடும்பம் வாடுவது மட்மின்றி பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தற்போது இதுவெல்லாம் பற்றாக்குறையாக நம் தமிழக அரசு 'எலைட்' என்ற பெயரில் வெளிநாட்டு சரக்குகளை இறக்குமதி செய்து, குடிமக்களை குஷிப் படுத்த முனைந்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்துவிடும் நிலையைத்தான் போதை என்று கூறப்படுகிறது. மேலும் மூளையின் செல்கள் பாதிப்படையச் செய்த அதன் வளர்ச்சியை தடைசெய்கிறது. தனால் நினைவாற்றல் குறைவதோடு, அந்த சமயத்தில் நாம் என்ன செய்கிறோம் ? என்ற பிரக்ஞைகூட இருக்காது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும்.

நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை, ரத்தத்தில் ஆல்கஹாலை பீய்ச்சும் அரசு இயந்திரங்கள் அமுல்படுத்த முனைய வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும்.

முடிவுரை :

'தீமைகளுக்கெல்லாம் தீமை மது' என்று சொன்னால் மிகையல்ல. இதன் மோசமான கெடுதிகளை நாம் சிந்தித்தால் மது பாவத்தின் அன்னை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. மதுவினால் விளையும் தீமைகள் அனைத்து துறைகளையும் பாதிக்கக்கூடிய உடல் நலக்கேடு, சுகாதாரக்கேடு, பொருளாதார நஷ்டம்,சமூக சீர்குலைவு, அரசியல் அநாகரீகம் என சகல மட்டங்களிலும் மதுவின் தீமைகள் பரவி கிடக்கின்றது.

இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். இவ்வுலகில் எந்த ஒரு சமயமும், மது அருந்துவதை நியாயப்படுத்தி போதனை செய்யவில்லை. 

"மது அருந்துவதை விட்டு நீங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே பாவங்களின் தாயாக உள்ளது" என்ற நபிமணியின் பொன்மொழி நமது நெஞ்சில் என்றென்றும் ஒலித்துக்கோண்டிருக்கட்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்ட நாம் மதியை போக்கும் மதுவே  போ....... போ...... என விடைபெறுவோமாக. குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். குடிமகன்கள் உணர்ந்திடாத வரை குடி ஒழிந்திடாது.

ஒவ்வொரு தனி மனிதனும், மதுவின் தீங்குகளை உணர்ந்து மனதளவில், இறைவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி பூணும் பொது பூரண மது ஒழிப்பு நிச்சயம் சாத்தியமே... சாத்தியமே...

வாழ்த்துக்கள் எம்.பஹ்ஜத் குபுரா அவர்களே.. தொடரட்டும் தங்கள் சிந்தனைகள்...

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அருமையான கட்டுரை. இதை எழுதியவருக்கும், இதை வெளியிட்டவருக்கும் அல்லாஹ் அருள் பாலிக்கட்டுமாக! ஆமீன்.

    -ஜமீல் முஹம்மது.

    ReplyDelete