Friday 25 October 2013

ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரையாளர். கீழக்கரை ஸஹிருதீன்

மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய் “மொழி” அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.  மொழியினை மிகச்சரியாக விளக்கிக் கூறினால் மொழியானது சப்தமிடும் வார்தைகள் மட்டுமல்ல ஓசையில்லா அசைவுகளும் கூடத்தான். ஒரு மொழியின் முக்கியக் குறிக்கோள் தகவல் பரிமாற்றம் தானே !!



இதன் அடிப்படையில் ”மழை வரும் முன் தன் தோகையை விரித்தாடும் மயில் மனிதனுக்கு சப்தம் இல்லாமல் சொல்கிறது.. 'மழை' வரப்போகிறது என்று; மண்ணில் புதைந்த சிறுவிதையில் இருந்து தன் மெல்லிய சக்தி கொண்டு பூமியை முட்டிக் கொண்டு வெளிவரும் முதல் இலை, நான் உங்களுக்கு பயன் தர வந்துவிட்டேன் என கூறுகின்றது; இது தான் தன் உலகமோ ?? என சந்தேகத்தில் இருந்த கோழிக்குஞ்சு முட்டைத் தோடுகளை உடைத்துக் கொண்டுவந்து “இன்று எனக்கு பிறந்தநாள்” என நம்மிடம் மொழி பேசுகின்றது”.

உலகில் இன்று வரை 6500கும் மேற்பட்ட  மொழிகள் பேசப்படுகின்றன, இதில் பழக்கதில் இருந்து பேசப்படாமல் போன மொழிகளும் பல. ஆனால் இன்றைய நாகரீக உலகம் ஒரே ஒரு மொழியை மட்டும் தன் தலையில் தூக்கி வைததுக் கொண்டு ஆடுகின்றது ! அதேதான், அந்த மொழியே தான் !! ENGLISH!! ஏன் இந்த மொழிக்கு மட்டும் இவ்வளவு மவுசு ?? மனிதனின் வழ்க்கையில் அங்கு இங்கு என எங்கு பார்த்தாளும் இந்த மொழியின் ஆக்கிரமிப்பாய் தானே உள்ளது ?? இந்த கேள்விக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் ஒரு மிக முக்கியமான காரணம் உண்டு, அந்த காரணத்தை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே அறிவீர்கள்

இம் மொழி இல்லை என்றால் உலகமே அசையாது என்ற சூழலும் வந்து விட்ட்து ஆனால் நமது பெற்றோர்களிடமோ அல்லது நமது வாப்புச்சா மற்றும் அப்பாமார்களிடம் கேட்டுப்பாருஙள், அவர்கள் பள்ளி பயிலும் காலத்தில் அவர்கள் அனைவருக்கும் பெரிய பூச்சாண்டியாய் இருந்தது அவர்களது ஆங்கில வாத்தியார் தான்.

“இங்லீஸ் வாத்தியர் வகுப்புடா அடுத்து !! மாப்புல, மதுல ஏரிக்குதிச்சி ஓடுடா !!!

என்ற அவர்கள் காலம் போய் ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. கிரிக்கெட் கமெண்டரியில் பேசுவது போல தஸ்ஸ்..  புஸ்ஸ்..  என பேச பலருக்கும் ஆசை. இந்த ஆசைக்கு வயது வரம்பு கிடையது !! உண்மை என்ன வெனில் இம்மொழியை கற்றுக் கொள்வது மிக எளிமை. தற்போது இம்மொழியை எளிதில் கற்றுக் கொள்வது எவ்வாறு என பார்ப்போம். இது ஒருவரின் மொழித்திறனை பொருத்தே அமைகின்றது, ஆதலால் நாம் அடிப்படையில் இருந்து கற்றுக்க கொள்ள விரும்பும் ஒருவரது பார்வையில் இருந்து செல்வோம்.

இந்த கற்றுக்கொள்ளும் முயற்சியை நாம் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு மிகச்சரியக ஒப்பிடலாம், ஒரு கட்டுமானத்தை உருவாக்கு வாக்குவதற்கு மிக முக்கியமாகவும், அதிகமாகவும் தேவைப்படுவது “செங்கல்” மற்றும் “சிமெண்ட்” தானே ! அதே போல வார்த்தைகள் (VOCABULARY) செங்கல்லாகவும் இலக்கணம் (GRAMMER) சிமெண்ட்டினைப் போலவும் வார்த்தைகளை ஒன்றோடு ஒன்றை இனைத்து நமது தேவைக்கேற்ப வடிவமைத்து பேசுவதற்கு உதவுகின்றது. 

சராசரியாக 600 முதல் 1000 ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தால் ஒருவரால் அடிப்படையாக ஆங்கிலம் பேச முடியும். ஆயிரம், ஐநூறு என்ற உடன் மலைத்து விட வேண்டாம் !! இதற்கு நான் உஙகளுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு சுவாரசியமான உண்மயைச் சொல்கிறேன். சமீபத்தில் நான் செய்த ஒரு சிறு ஆய்வில், நாம் பேசும் 100 வார்தைகளில் 40-ல் இருந்து 60 வார்த்தைகள் ஆங்கில வார்தைகளாக அமைவதைக் கணடேன். சற்று கவனியுங்கள்.

\TV, FAN, RADIO, PHONE,  MOBILE, COMPUTER, LAPTOP, PENDRIVE, SHIRT, PANT, CURRENT, BIKE, CAR, PETROL, TABLE, SOFA, TOWEL, KERCHIEF, ELECTRICIAN, MOTOR, PIPE, SHOWER, SPEAKER, MOUSE, KEYBOARD,  WATCH, ENGINE, BREAK, CALL, SCHOOL, TUTION, LEAVE, PEN, PENCIL, NIGHT, SIR, MADAM, BUS, MESSAGE, SCAN, MAIL, TEA, COFFEE, JUICE,  ICECREAM,  EXAM, TEST, MATCH, TROUSER, PASTE, SOAP, SHAMPOO, UNCLE, AUNTY, ASSIGNMENT, AUTO, ROAD, SPEEDBREAKER, XEROX, PRINTOUT, PICNIC, TOUR, RATECUTTER, BOOSTER, INTERNET, FACEBOOK, POST, HOSPITAL, CLINIC, GYM, CHAIN, SHOE, COMPUTER, LAPTOP, TABLET, MODEM, REMOTE, BEDSHEET, WINDOW, MARRIAGE, CLASSROOM, PASS, FAIL, KEYCHAIN, ELECTRICIAN, PLUMBER, DADDY, MUMMY,  GIFT, TIE, SPRAY, FLIGHT, NIGHT, STOVE, PLATE, SPOON, TOWEL, PERFUME, PRAYER, FAST, LATE, OFFICE. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...

இது அனைத்தும் தமிழ் வார்த்தைகளா என்ன ?? நான் குறிப்பிட்டது மட்டுமே 100 வார்த்தைகள், இன்னும் நீண்டு கொண்டே போகும். இப்படி நாம் பேசும் இரண்டு வார்த்தைகளில் ஒன்று ஆங்கில வார்த்தையாக அமைகிறது. இதில் இன்னும் சுவாரசியம் என்ன வென்றால் நாம் தான் இப்படி பேசுகிறோம் என்று பார்த்தால் நமது கண்ணுமாமார்களும், வாப்புச்சாமார்களும் நாம் பேசுவதில் பாதியை பேசுகிறார்க்ள் என்பது தான் !! அதனால் நமக்கு 400 – 600 வார்த்தைகள் இயல்பாகவே தெரியும். இன்னும் 400 வார்த்தைகள் தானே எளிதில் கற்றுக்கொள்ளலாம், கவலை வேண்டாம் !

அடுத்ததாக நம்ம சிமெண்ட் அதுதான் நம்ம இலக்கணம் (GRAMMER). இதன் தரம் மிக முக்கியம். இதை வைத்தே தேவைக்கேற்ப நம்மால் வார்த்தைகளை இணைத்து சரிவர பேசமுடியும். ஆதலால் இதனை கற்றுக் கொள்வதில் சற்று கவனம் தேவை, ஆனால் இதை கற்றுக் கொள்வது மிகவும் சுலபம்.

கட்டிய கட்டுமானதின் மீது அடிக்கடி தண்ணீர் ஊற்றி அதனை வலுப்படுத்துவது போல் நாம் கற்றுக் கொண்ட வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூர்ந்து பேச்சு வழக்கில் பயண்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அது மனதில் உருதியாக நிற்கும், ஏனெனில் புதிதாய்க் கற்றுக் கொண்ட வார்த்தைகள் எளிதில் மறந்துபோக அதிக வாய்ப்புள்ளது

சாதாரணமாக வாழ்வதற்க்கு ஒரு மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அடிப்படையான வீடு போதும் அல்லவா ? அதுபோல அடிப்படையாக ஆங்கிலம் பேசுவதற்க்கு (BASIC COMMUNICABLE ENGLISH). நான் மேற்கூறிய முயற்சிகள் போதுமானது !! இதற்க்கு மேல் மாடிக்கு மேல் மாடிகட்டுவதும், அழகாக்குவதும் நமது எண்ணத்தயும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

இனி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கனும் அல்லவா ? இப்பொழுது தான் நமது நண்பர்கள், சொந்தக்காரர்கள் என அனைவரிடமும் ஆலோசனைக் கேட்போம். என்ன கலர் அடிப்பது, இதை எங்கேவைப்பது, அதை எங்கே வைப்பது என அனைத்து திசைகளில் இருந்தும் ஐடியாக்கல் குவியும். அதனால் இப்பொழுது டிப்ஸ் & ஐடியாஸ்.

டிப்ஸ் 1: 

தங்களின் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் தம்பி, தங்கை மற்றும் மருமக பிள்ளைகளின் ஆங்கில கதை புத்தகத்தை எடுத்து சற்று வாசியுங்கள். இதில் மிக எளிமையான ஆங்கில வார்த்தைகள் தான் பயன் படுத்தப்பட்டு இருக்கும். நம்மால் எளிதில் புரிந்து கொள்ளவும் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும் இது உதவும்.

டிப்ஸ் 2: 

கதைப்புத்தகங்கள் படிப்பது சுலபமாக புரிகிறதெனில் அடுத்ததாக செய்தித்தாள் (NEWSPAPER) படிக்கத் தொடங்குங்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் தெரியாத வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ள தொடங்கிவிட்டால், இது பெறும் பயன்தரும்.

டிப்ஸ் 3: 

இயன்ற வரை ஆங்கிலம் பேசும் சூழ்நிலைக்குள் இருக்கப் பழகுங்கள். இது நமது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள சிறப்பாக உதவும்.

டிப்ஸ் 4: 

தவறுகளை பற்றி அனுவளவும் கவலைவேண்டாம். தவறுகளே நம்மை சிறப்பாக பேசவைக்கும்.. நாம் தவறு செய்யும் போது நம்மை மற்றவர்கள் திருத்துவார்க்ள். இதனால் நாம் இன்னும் வலுபெறலாம். “வெற்றிக்கு முற்றுப்புள்ளி மட்டுமே வைக்கத் தெரியும் ஆனால் தோல்வியால் மட்டும் தான் காற்புள்ளி வைக்க முடியும்”

டிப்ஸ் 5: 

மற்றவர்கள் ஆங்கிலம் பேசுவதை கவனியுங்கள், அவர்கள் எவ்வாறு வார்ததைகளை பயன் படுத்துகிறார்கள் எனவும், அவர்களின் உச்சரிப்புகள் எவ்வாறு அமைகின்றன எனவும் கவனியுங்கள் (OBERVATIONAL LEARNING). உதாரணமக ஆங்கில நியூஸ் சேனல்கள், கிரிகெட் கமண்டர்ரி போன்ற ஆங்கில நிகழ்ச்சிகளை பார்த்து வாருங்கள். இதன் மூலமாக நாம் PHONETICS, USAGE OF WORDS, STYLE & WAY OF SPEAKING என பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

டிப்ஸ் 6:

PRE DEFINED FORMAT என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது பேசுவதற்க்கு குறிப்பிட்ட TEMPLATE-களை வைத்துப் பேசிப்பழகுவதாகும். இதற்கு சரியான ஒரு எடுத்துகாட்டு சூரத்துல் ஃபத்திஹா தான். எந்த ஒரு மனிதனும் சூரத்துல் ஃபத்திஹாவை உட்கார்ந்து மனப்பாடம் செய்ததில்லை. அடிக்கடி கேட்டு கேட்டு அதுவே நம் மனதில் பதிந்து விட்டது அல்லவா ? அதுபோல் ஒரு முறை பேசினால் இந்த இடத்தில் இப்படித் தான் பேசவேண்டும் என நமக்கே தெரிந்துவிடும்.

அடடே, ஒரு முக்கியமான விசயத்தயே மறந்து விட்டோமே. அது இல்லாமல் எப்படி வீட்டைக்கட்டுவது ?? அதுதான் அஸ்திவாரம்... 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையையும், மன உறுதிதியையும் அஸ்திவாரமாய் அமைத்து அதன் மீது உஙகள் வீட்டினை எழுப்புங்கள். வல்ல இறைவன் அதை உறுதியாக்குவான். இனி என்ன..! வீட்டைக்கட்ட தொடங்க வேண்டியது தானே ? மறக்காமல் வீடு குடியேருவதற்கு என்னையும் அழையுங்கள். இதன் மூலம் ஒருவர் கல்வியை அறிந்து கொண்டார் ! பேசுகிறார் என்ற அகமகிழ்சியுடன் நிச்சயமாக வருவேன்.

இறைவன் அருளால் எனது முதல் கட்டுரைக்கு எண்ணிப்பார்க்க இயலாத வாழ்த்துக்களை அல்லாஹ் மிகப்பெரியமனிதர்களிடம் இருந்து எல்லாம் எனக்கு கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ் !!! 

எனக்கு வாய்ப்பளித்த மற்றும் வாழ்த்திய அனைத்து நல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் படித்த இளைஞர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு இக்கட்டுரையை அந்த முயற்சிக்கு என்னுடய முதல் பங்களிப்பாக, கல்வி வளர்சிக்காக சமர்ப்பிக்கின்றேன். இக்கட்டுரை அனைத்து தரப்பு மக்களுக்கும், முக்கியமாக தமிழ் வழியாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என இறைவனை பிரார்திக்கிறேன். 

மேலும் ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு Saheerudeen Klk என்ற எனது முகபுத்தக முகவறிக்கோ அல்லது +91-7871513370 என்ற எனது எண்ணிற்கோ தொடர்புகொள்ளுங்க்ள். உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உங்களது சந்தேகங்களை கீழக்கரையின் நலம் விரும்பி பாடுபடும்  முகப்புத்தக பக்கங்களில் போஸ்ட் செய்யுங்கள், நமது சகோதரர்கள் நிச்சயமாக உதவுவார்கள். மறவாமல் இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள். முக்கியமாக மாணவர்களுக்கு இந்த வழிமுறையை சொல்லுங்கள்.

சித்திரமும் கைப்பழக்கம் !! ஆங்கிலமும் நா பழக்கம் !!
விளைவோம்.... ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை நோக்கி.... இன்ஷா அல்லஹ் !

Wednesday 23 October 2013

கீழக்கரையில் காலாவதியான காகித கடிதத்திற்கான காத்திருப்புகள் - கட்டுரையாளர் கீழை இளையவன் !

கீழக்கரை நகரத்து ஆண் மக்களில் 80 சதவீதத்தினர் இன்றும் வருவாய் தேடி கடல் கடந்து சென்று வசிக்கின்றனர். மனைவி, மக்களை, சொந்தங்களை, நண்பர்களை எல்லாம் பிரிந்து சென்று பாலைவனங்களில் வாடும் அவர்களின் சோகக் கணைகள் சொல்லி மாளாது. அதுவும் 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொலை தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. திருமணமாகி இரண்டு மாதமே ஆகியிருக்கும் சூழலில், வருவாய் தேடி வளைகுடா பயணம் மேற்கொண்டு, மனைவியை இரண்டு மூன்று வருடங்கள் பிரிந்து வாழும், மிக சோகமான தருணங்கள் இருந்து வந்தது.


அப்போதெல்லாம் மனக் காயத்திற்கு அருமருந்தாக, பிரிவால் வாடும் இதயங்களை தேற்றும் நண்பனாக, உறுதுணையாய் நின்றது "கணவன் மனைவிக்கிடையே" நடை பெற்ற கடிதப் போக்குவரத்து தான். ஆனால் அந்த அற்புதமான கடிதப் போக்குவரத்து எல்லாம் தற்போது காலாவதியாகிவிட்டது. போஸ்ட் பாக்ஸ்கள் எல்லாம் குப்பை கூடைகளாகி விட்டது. ஒருகாலத்தில் மக்களால், மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வந்த போஸ்ட் மேன்கள், இன்று மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டனர். 

இந்த அதி நவீன உலகில், நாம் இன்றோ பேஸ் புக்கில் பேசிக் கொள்கிறோம், அமெரிக்காவில் இருந்து வாட்ஸ் அப்பில் நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறோம். மன நிலை சரியில்லாதவர்களை தவிர எல்லோரிடமும் செல் போன் இருப்பதாக ஸ்டேடஸ் போடுகிறார்கள். தனி செல் போன் நம்பர், பேஸ் புக் ஐ டி இல்லாதவர்கள் சமூகத்தில் கோளாறு உடையவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆப்பிள் லேப் டாப், ஐ.பாட்,  நானோ டெக்னாலஜி என தகவல் பரிமாற்றம் படு வேக வளர்ச்சி கண்டுள்ளது. கீழக்கரையில் தூறல் விழுந்தால் சான் பிரான்சிகோவில் சாரல் அடிக்கிறது.


இடம் : லெப்பை தெரு சந்திப்பு, கீழக்கரை 

கீழக்கரை நகரில் என்பதுகளில் (1980- 89) , டேப்ரிக்கார்டர் இருந்த வீடுகளில் எல்லாம் நாகூர் சலீம் இயற்றி, காயல்.ஷேக் முகம்மது பாடிய, "கப்பலுக்கு போன மச்சான்" என்கிற பாடல் வரிகள், ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்தப் பாடலில் கணவனைப் பிரிந்த மனைவியின் துயரத்தையும், மனைவியைப் பிரிந்த கணவனின் சொல்லொன்னா சோகத்தையும், தவிப்பையும், வளைகுடா வாழ்கை பற்றியும் தெளிவாக சொல்லியிருப்பார். 

இந்தப் பாடலை பிரிவின் விளிம்பில் இருக்கும் தலைவனோ, தலைவியோ.. தனிமையில் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வழிந்தோடும். இன்றும் அரபு நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இந்த பாடலை கேட்டு அழுகையை அடக்க முடியாமல் தேம்பி அழுபவர்கள் ஏராளம். கீழக்கரையில் தொலை காட்சி பெட்டியின் வரவுக்கு முன்னால், ஆடியோ கேஸட்டுகளும்,  டேப் ரிக்கார்டர்களும் மட்டுமே அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இந்த பாடலின் வரிகள் இதோ :

மனைவி:

கப்பலுக்கு போன மச்சான்,
கண் நிறைந்த ஆசை மச்சான் எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.
நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

கணவன்:

கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல நினைத்தது எல்லாம் தருவேன்.

மனைவி:

அக்கரைக்கு போனதுமே அக்கறையும் போயுடுச்சோ?
அன்று சொன்ன வார்தைகளின் அர்தங்களும் மாறிடுச்சோ?
சக்கரை மேல் கோபம் கொண்டு கட்டெரும்பும் ஓடிருச்சோ?
சங்கதி தெரியலையே! மன்னன் மனம் வாடிருச்சோ?

கணவன்:

அன்னமே அடிக் கரும்பே ஆவல் என்னை மீறுதடி
எண்ணை கிணறு போல எண்ணம் எல்லாம் ஊறுதடி.
உன்னை அங்கு விட்டு வந்து உள்மனசு வாடுதடி.
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கு வாழுதடி.

மனைவி:

துபாயுக்கு பயணம் போயி வருசம் ஆறாச்சு
துள்ளி வரும் காவிரி போல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நான் இங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்துடுங்க தக்க துணை நானாச்சு!!

கணவன்:

பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி!
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமே பாரிலே யாருக்கடி?

மனைவி:

துல்ஹஜ் மாதத்திலே கடிதம் ஒண்ணு போட்டிங்க
நலமா சுகமானு பாசம் வச்சு கேட்டிங்க!
இங்கே எனக்கு என்னை குறை!
இருக்கிறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்லை!!!

கணவன்:

ஈச்சமர தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாதத்திலே தீர்ந்து விடும் ஒபந்தமே!!
ஆக்க பொருத்தவளே ஆறப் பொறு ரத்தினமே!
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல
நினைத்தது எல்லாம் தருவேன்.

இந்த பாடலை கேட்க : 


தொலை தொடர்பு வசதிகள் குறைந்த அந்த காலக்கட்டத்தில், வசதி படைத்த சிலர் வீடுகளில் மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அதனால் இன்று நாம் நினைத்தவுடன், மனைவி, மக்களுடன் பேசி மகிழ்வது போல் உடனடியாக பேசி விட முடியாது. அவசர தகவல்களை சொல்ல வேண்டுமென்றாலும், தொலைபேசி வைத்திருந்தவர்களின் வீடுகளில் அரை நாளுக்கு மேல் காத்திருந்து தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் தான் நிலவியது. 

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கடிதம்  சென்றடைய இரண்டு வாரம் குறையாமல் ஆகி விடும். வீட்டிலிருந்து  வரும் கடிதத்தை எதிர்பார்த்து கண்ணீர் வடிக்கும் கணவனும், அதே போல் கணவனின் கடிதத்தை எதிர் பார்த்து போஸ்ட் மேன் அண்ணன் எப்போது வருவார் என ஏக்கத்துடன் காத்திருக்கும் மனைவியின் வாட்டமும் எழுத்தில் வடிக்க முடியாத வேதனைகள். வீட்டு வாசலில் 'அம்மா... போஸ்ட்' என்கிற  சப்தம் கேட்டு அடுப்பங்கரையில் சோறு வடிக்கும் பெண்மணி புன்னகையோடு ஓடி வந்து, 'கடிதம் துபாயிலிருந்து தானே  வந்திருக்கு.. அல்ஹம்துலில்லாஹ்' என நெஞ்சில் அணைத்தவாறு கொண்டு செல்வார்.


தற்போதைய கீழக்கரை போஸ்ட் மேன்கள் 

கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், துன்பங்கள் எல்லாம் கொஞ்ச நேரம் காணாமல் போக, இதயத்தில் மகிழ்ச்சி பொங்க ஒத்தடம் கொடுப்பதாக அமையும். கடிதத்தை பிரித்து தன் அன்புக் கணவரின் கைகளால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை முத்தமிடும் மனைவி, ஒரேழுத்து விடாமல் திரும்ப திரும்ப படித்து  மகிழ்ந்திடுவர். அது போல் அரபு நாட்டில் மனைவியின் கடிதம் கண்ட கணவனும் தலையைனை அடியில் வைத்து, மனைவியின் அன்பு வரிகளை  நித்தமும் வாசித்து சுவாசிப்பார். அந்த அற்புத காலங்களை தற்போது நவீனம் துண்டாடிவிட்டது எனபது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நவீன வரவுகளால் 
எழுதுகோலின் மகத்துவம் 
மெல்ல மறைந்து வருகிறது...
அளவற்ற  கதைப்புகளால் - அன்பும்
அதி வேகமாய் குறைந்து வருகிறது....

வாருங்கள் நண்பர்களே..  ஒரு கடிதம் எழுதுவோம்...! 
அன்பே... ஆருயிரே.. என்னவளே... என்று.  எழுதுகோல் தாங்கி..!