Wednesday, 23 October 2013

கீழக்கரையில் காலாவதியான காகித கடிதத்திற்கான காத்திருப்புகள் - கட்டுரையாளர் கீழை இளையவன் !

கீழக்கரை நகரத்து ஆண் மக்களில் 80 சதவீதத்தினர் இன்றும் வருவாய் தேடி கடல் கடந்து சென்று வசிக்கின்றனர். மனைவி, மக்களை, சொந்தங்களை, நண்பர்களை எல்லாம் பிரிந்து சென்று பாலைவனங்களில் வாடும் அவர்களின் சோகக் கணைகள் சொல்லி மாளாது. அதுவும் 1980 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொலை தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. திருமணமாகி இரண்டு மாதமே ஆகியிருக்கும் சூழலில், வருவாய் தேடி வளைகுடா பயணம் மேற்கொண்டு, மனைவியை இரண்டு மூன்று வருடங்கள் பிரிந்து வாழும், மிக சோகமான தருணங்கள் இருந்து வந்தது.


அப்போதெல்லாம் மனக் காயத்திற்கு அருமருந்தாக, பிரிவால் வாடும் இதயங்களை தேற்றும் நண்பனாக, உறுதுணையாய் நின்றது "கணவன் மனைவிக்கிடையே" நடை பெற்ற கடிதப் போக்குவரத்து தான். ஆனால் அந்த அற்புதமான கடிதப் போக்குவரத்து எல்லாம் தற்போது காலாவதியாகிவிட்டது. போஸ்ட் பாக்ஸ்கள் எல்லாம் குப்பை கூடைகளாகி விட்டது. ஒருகாலத்தில் மக்களால், மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வந்த போஸ்ட் மேன்கள், இன்று மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டனர். 

இந்த அதி நவீன உலகில், நாம் இன்றோ பேஸ் புக்கில் பேசிக் கொள்கிறோம், அமெரிக்காவில் இருந்து வாட்ஸ் அப்பில் நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறோம். மன நிலை சரியில்லாதவர்களை தவிர எல்லோரிடமும் செல் போன் இருப்பதாக ஸ்டேடஸ் போடுகிறார்கள். தனி செல் போன் நம்பர், பேஸ் புக் ஐ டி இல்லாதவர்கள் சமூகத்தில் கோளாறு உடையவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆப்பிள் லேப் டாப், ஐ.பாட்,  நானோ டெக்னாலஜி என தகவல் பரிமாற்றம் படு வேக வளர்ச்சி கண்டுள்ளது. கீழக்கரையில் தூறல் விழுந்தால் சான் பிரான்சிகோவில் சாரல் அடிக்கிறது.


இடம் : லெப்பை தெரு சந்திப்பு, கீழக்கரை 

கீழக்கரை நகரில் என்பதுகளில் (1980- 89) , டேப்ரிக்கார்டர் இருந்த வீடுகளில் எல்லாம் நாகூர் சலீம் இயற்றி, காயல்.ஷேக் முகம்மது பாடிய, "கப்பலுக்கு போன மச்சான்" என்கிற பாடல் வரிகள், ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்தப் பாடலில் கணவனைப் பிரிந்த மனைவியின் துயரத்தையும், மனைவியைப் பிரிந்த கணவனின் சொல்லொன்னா சோகத்தையும், தவிப்பையும், வளைகுடா வாழ்கை பற்றியும் தெளிவாக சொல்லியிருப்பார். 

இந்தப் பாடலை பிரிவின் விளிம்பில் இருக்கும் தலைவனோ, தலைவியோ.. தனிமையில் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வழிந்தோடும். இன்றும் அரபு நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இந்த பாடலை கேட்டு அழுகையை அடக்க முடியாமல் தேம்பி அழுபவர்கள் ஏராளம். கீழக்கரையில் தொலை காட்சி பெட்டியின் வரவுக்கு முன்னால், ஆடியோ கேஸட்டுகளும்,  டேப் ரிக்கார்டர்களும் மட்டுமே அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இந்த பாடலின் வரிகள் இதோ :

மனைவி:

கப்பலுக்கு போன மச்சான்,
கண் நிறைந்த ஆசை மச்சான் எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.
நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

கணவன்:

கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல நினைத்தது எல்லாம் தருவேன்.

மனைவி:

அக்கரைக்கு போனதுமே அக்கறையும் போயுடுச்சோ?
அன்று சொன்ன வார்தைகளின் அர்தங்களும் மாறிடுச்சோ?
சக்கரை மேல் கோபம் கொண்டு கட்டெரும்பும் ஓடிருச்சோ?
சங்கதி தெரியலையே! மன்னன் மனம் வாடிருச்சோ?

கணவன்:

அன்னமே அடிக் கரும்பே ஆவல் என்னை மீறுதடி
எண்ணை கிணறு போல எண்ணம் எல்லாம் ஊறுதடி.
உன்னை அங்கு விட்டு வந்து உள்மனசு வாடுதடி.
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கு வாழுதடி.

மனைவி:

துபாயுக்கு பயணம் போயி வருசம் ஆறாச்சு
துள்ளி வரும் காவிரி போல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நான் இங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்துடுங்க தக்க துணை நானாச்சு!!

கணவன்:

பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி!
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமே பாரிலே யாருக்கடி?

மனைவி:

துல்ஹஜ் மாதத்திலே கடிதம் ஒண்ணு போட்டிங்க
நலமா சுகமானு பாசம் வச்சு கேட்டிங்க!
இங்கே எனக்கு என்னை குறை!
இருக்கிறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்லை!!!

கணவன்:

ஈச்சமர தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாதத்திலே தீர்ந்து விடும் ஒபந்தமே!!
ஆக்க பொருத்தவளே ஆறப் பொறு ரத்தினமே!
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல
நினைத்தது எல்லாம் தருவேன்.

இந்த பாடலை கேட்க : 


தொலை தொடர்பு வசதிகள் குறைந்த அந்த காலக்கட்டத்தில், வசதி படைத்த சிலர் வீடுகளில் மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அதனால் இன்று நாம் நினைத்தவுடன், மனைவி, மக்களுடன் பேசி மகிழ்வது போல் உடனடியாக பேசி விட முடியாது. அவசர தகவல்களை சொல்ல வேண்டுமென்றாலும், தொலைபேசி வைத்திருந்தவர்களின் வீடுகளில் அரை நாளுக்கு மேல் காத்திருந்து தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் தான் நிலவியது. 

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கடிதம்  சென்றடைய இரண்டு வாரம் குறையாமல் ஆகி விடும். வீட்டிலிருந்து  வரும் கடிதத்தை எதிர்பார்த்து கண்ணீர் வடிக்கும் கணவனும், அதே போல் கணவனின் கடிதத்தை எதிர் பார்த்து போஸ்ட் மேன் அண்ணன் எப்போது வருவார் என ஏக்கத்துடன் காத்திருக்கும் மனைவியின் வாட்டமும் எழுத்தில் வடிக்க முடியாத வேதனைகள். வீட்டு வாசலில் 'அம்மா... போஸ்ட்' என்கிற  சப்தம் கேட்டு அடுப்பங்கரையில் சோறு வடிக்கும் பெண்மணி புன்னகையோடு ஓடி வந்து, 'கடிதம் துபாயிலிருந்து தானே  வந்திருக்கு.. அல்ஹம்துலில்லாஹ்' என நெஞ்சில் அணைத்தவாறு கொண்டு செல்வார்.


தற்போதைய கீழக்கரை போஸ்ட் மேன்கள் 

கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், துன்பங்கள் எல்லாம் கொஞ்ச நேரம் காணாமல் போக, இதயத்தில் மகிழ்ச்சி பொங்க ஒத்தடம் கொடுப்பதாக அமையும். கடிதத்தை பிரித்து தன் அன்புக் கணவரின் கைகளால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை முத்தமிடும் மனைவி, ஒரேழுத்து விடாமல் திரும்ப திரும்ப படித்து  மகிழ்ந்திடுவர். அது போல் அரபு நாட்டில் மனைவியின் கடிதம் கண்ட கணவனும் தலையைனை அடியில் வைத்து, மனைவியின் அன்பு வரிகளை  நித்தமும் வாசித்து சுவாசிப்பார். அந்த அற்புத காலங்களை தற்போது நவீனம் துண்டாடிவிட்டது எனபது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நவீன வரவுகளால் 
எழுதுகோலின் மகத்துவம் 
மெல்ல மறைந்து வருகிறது...
அளவற்ற  கதைப்புகளால் - அன்பும்
அதி வேகமாய் குறைந்து வருகிறது....

வாருங்கள் நண்பர்களே..  ஒரு கடிதம் எழுதுவோம்...! 
அன்பே... ஆருயிரே.. என்னவளே... என்று.  எழுதுகோல் தாங்கி..!

No comments:

Post a Comment