Tuesday 7 February 2012

"குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால்..?" - கட்டுரையாளர் அஹமது அஸ்பாக் துபாயிலிருந்து...

முன்னுரை

மலேரியா கொசுக்களின் பிறப்பிடமாக, தென் ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளுக்கு அடுத்தபடியாக இராமேஸ்வரம் முதல் கீழக்கரை வழியாக வாலிநோக்கம்  கடற்கரை  வரையிலுள்ள பகுதிகள் தான் என்று புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.  அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள் என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.

நம் எழில் கொஞ்சும் கடற்கரை நகரமான கீழக்கரையிலும்,  நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் நம் நகராட்சியாலும, சமூக ஆர்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.




குப்பைகள் இல்லா நல்லுலகு !

குப்பைக்கு குப் என்று தீ வைத்து விட்டால், குப்பைகள் காணாமல் போய்விடும் என்று எண்ணுகின்றார்கள். ஆம்... குப்பைகள்  நம் கண்களில் இருந்து மறைவது உண்மைதான். ஆனால், அது நமது காற்று மண்டலத்தில் கலந்து, புற்று நோய் உண்டாக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நமது இஸ்லாமிய மார்க்கம், "சுத்தத்தின் உறைவிடம், அசுத்தத்தின் எதிரி", என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால் நமது கீழக்கரையை காணும் பொழுது, அது உண்மை தானா ? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

அன்புச் சகோதர்களே, கிழக்கரை சுத்தத்திற்கும், இஸ்லாமிய மர்க்த்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா ?  நமது ஊர் ஜனத்தொகையில் 65 விழுக்காடுக்கு மேல் முஸ்லிம்கள் தான் உள்ளனர் என்று புள்ளி அறிக்கைகள் தெரிவிகின்றன. அப்படி இருக்க, நமது ஊர் கீழக்கரை ஓர் குப்பைக்ரையாக மாறியதன் காரணம் என்ன என்பதை சற்று அலசிப் பார்போம்.

சிறு துளி.. பெரு வெள்ளம்...


“சிறு துளி, பேரு வெள்ளம்” என்பது போல, சிறிது சிறிதாக கூடிய குப்பைகள் இன்று டன் கணக்கில் குவியக் கூடிய, ஓர் குப்பை மலையாகவே காட்சி அளிக்கின்றது. எழில்மிகு கடற்கரையை, கடலும் கடல் சார்ந்த தொழில்களை பிரதான மையமாக கொண்ட நமது ஊரில், இப்படி ஓர் அவலம் ஏற்படக் காரணம். நாம்.....ஆம் நாம் மட்டுமே.....

குப்பைகள் கொட்ட ஏக்கர் கணக்கில் நிலம்


இன்று நமது அரசியல் தலைவர்களை கேட்டால், குப்பை கொட்ட இடம் இல்லையாம். அல்லது ஒரு நல்ல இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் தான், ஊர் குப்பையாக இருக்கின்றதாம். இதைகேட்கும் போதெல்லாம், எனக்கு ஓர் கேலிப் பேச்சு தான் நினைவிற்கு  வருகின்றது “ ஒருவன் உமில்நீரை  துப்ப இடம் இல்லாததால், அவன் சட்டை பைக்குள் துப்பிக் கொண்டானாம்” அப்படி இருக்கின்றது இவர்களின் வார்த்தைகள்.



கடற்கரை ஓரமாக சாலை அமைத்த நல்லவர்கள். அங்கு சேரும் குப்பைகளை அகற்ற ஆவணம் செய்திருக்கலாமே!!! உடுத்துவதற்கு உடை வேண்டுமா, படுப்பதற்கு பாய் வேண்டுமா என்றால், உடை இல்லாதவன் உடையை தானே கேட்பான். நமது உடை சுகாதாரம். அதனை தேடுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். தற்போதைய நம் கீழக்கரை நகராட்சியாலும், சமூக ஆர்வலர்களின் முயற்ற்சியாலும் எடுக்கப்பட்டிருக்கும் பல முயற்சிகள் கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


பெயர் தெரியாத பல நோய்களை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் நம் கீழை நகரத்தின் நோய்கள் அனைத்தும் உருவாவது குப்பையில் தான் என்பது இன்று பலருக்கும் புரியாமலே இருக்கிறது. ஆனால் நாம் வாழ்வதே அந்த குப்பையில் என்றால் கேட்பதற்கே கவலையாக இருக்குகின்றது. நான் இம்முறை நமது ஊர் வந்த பொழுது, மிகவும் சரளமாக என் காதில் விழுந்த வார்த்தைகள் “உம்மாடி, என்னம்மா இது? எந்த டாக்டர்...ட போனாலும் கூட்டமா இருக்குதுமா” ஏன் இந்த அவலம் என்று ஆராய்ந்தால், சுகாதார இன்மை தான் அதற்க்கு பதிலாக வருகிறது. அதற்கு காரணம் நமது ஊரில் பெருகி கிடக்கும் குப்பைகளும், கூளங்களும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல் ஊர் நமதல்ல. என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

சிந்திக்கும் தருணமிது!


பண்டைய காலம் முதல் நம் கீழக்கரை நகரம் ஓர் அமைதிப் பூங்காவாக, எழில் கொஞ்சும் ஓர் இடமாகவே  விளங்கி இருக்குகின்றது. நமது ஊரை சுற்றி உள்ள சிறிய ஊர்களை, கிராமங்கள் என்று அழைக்கப்பட்டாலும், நமது ஊரை சிறு நகரமாகவே நாம் பாவித்து வருகின்றோம். நமது ஊர் ஒருமைப்பாட்டை மெச்சாத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட ஓர் ஊர் இப்படி குப்பை காடாக மாறியதன் காரணம் என்ன ?
கீழக்கரையில் கடுமையாக்கப் படவேண்டிய பாலிதீன் தடை

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார்.  பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.



பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. தற்போது நம் கீழக்கரையில் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் பாலிதீன் ஒழிப்பும் சிறிது நாள்களில் காணாமல் பொய் விடக் கூடாது.  இதற்க்கான மன மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.
என்ன செய்யலாம் ?

கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம். மக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம். மக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.



இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம். குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

முடிவுரை - முயற்சிகள் முடிவதில்லை ...

நம் கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது லாபிர் அவர்கள் தனி மனிதனாக இந்த சிகர சாதனையை அடைய முடியாது. அவர்கள் இந்த சுத்தத்தின் சிகரத்தை அடைய நினைப்பது.. அவருக்காக மட்டுமா? சற்று சிந்திக்க வேண்டும். இவர்கள் மட்டுமல்ல, எவர்கள் இது குறித்து முயற்சிகள் எடுத்தாலும் நம் அனைவர்களுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல், வெறுமெனே ஆயிரம் கருத்தரங்குகள் நடத்தினாலும் பயனில்லை.  கீழை இளையவன் முயற்சிகள் எடுக்கலாம், எக்ஸ்னோர வழிகளை சொல்லலாம். ஆனால் உங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒன்றும் மாறப்போவது இல்லை.

இது தொடர்ந்தால், பிழைப்பு தேடிச்செல்லும் நாடோடிகள் போல, நாமும் ஒருநாள் சுத்தம் தேடிச் செல்லும் ஓர் சமுதாயமாக மாறக்கூடும். இறைவன் காப்பானாக.......

நன்றி  அஹமது அஸ்பாக் அவர்களே !

No comments:

Post a Comment